தூய்மைக்கேட்டை குறைக்க பெட்ரோலில் மெத்தனால் கலக்கும் திட்டம் நிதின் கட்காரி உறுதி
சுற்றுப்புற தூய்மைக்கேட்டை குறைக்க பெட்ரோலில் மெத்தனால் கலக்கும் திட்டத்தை பாராளுமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பேன் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மும்பை,
சுற்றுப்புற தூய்மைக்கேட்டை குறைக்க பெட்ரோலில் மெத்தனால் கலக்கும் திட்டத்தை பாராளுமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பேன் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நிதின் கட்காரிமத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:–
காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக பெட்ரோலில் 15 சதவீதம் மெத்தனால் கலக்கும் திட்டத்தை வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் நான் அறிவிப்பேன். நிலக்கரியில் இருந்து பெறப்படும் மெத்தனால், லிட்டருக்கு வெறும் 22 ரூபாய் தான். இதனால், செலவு குறையும். மும்பையை சுற்றிலும் உள்ள தீபக் உர நிறுவனம், ராஷ்டிரீய ரசாயன மற்றும் உர நிறுவனங்கள் மெத்தனாலை உருவாக்குகின்றன.
இது தவிர, எத்தனாலையும் பரந்த அளவில் பயன்படுத்த வேண்டும். ரூ.70 ஆயிரம் கோடி செலவில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களை கட்டுவதற்கு பதிலாக எத்தனால் மீது கவனம் செலுத்துமாறு என்னுடைய சக பெட்ரோலிய துறை மந்திரியிடம் பரிந்துரை செய்திருக்கிறேன். எத்தனாலில் மட்டும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீட்டு வாய்ப்பு காணப்படுகிறது.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
1½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புமேலும், ஜவகர்லால் நேரு துறைமுக பொறுப்பு கழக சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய 24 தனியார் நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக கூறிய அவர், இதன் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.