விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் உருவபொம்மையை எரித்த 90 பேர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் உருவபொம்மையை எரித்த 90 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2017 3:58 AM IST (Updated: 10 Dec 2017 3:58 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி உருவப்பொம்மையை எரித்த 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை, திருப்பூரை சேர்ந்த இந்து மக்கள் முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கோபிநாத் அவதூறாக பேசியதை கண்டித்தும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் அவதூறாக பேசியதை கண்டித்தும் பெரியகுளத்தில் வைகை அணை சாலையிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் வக்கீல் கோபிநாத் ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் மற்றும் தென்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் ரபீக் உள்பட 90 பேரை கைது செய்தனர். இதனால் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரியகுளத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைவர்களின் உருவ பொம்மையை எரித்ததை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பியதை கண்டித்தும் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் ராஜபாண்டியன், நகர தலைவர் வேல்முருகன் மற்றும் கட்சியினர் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜியிடம் புகார் மனு கொடுத்தனர்.

அதில் பாரதீய ஜனதா கட்சி தலைவர்களின் உருவ பொம்மையை எரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Next Story