குஜராத் தேர்தல் முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தும் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு


குஜராத் தேர்தல் முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தும் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 10 Dec 2017 4:52 AM IST (Updated: 10 Dec 2017 4:52 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் தேர்தல் முடிவு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

விழாவில் சோனியாகாந்தியின் 71–வயதை குறிக்கும் வகையில் 71 கிலோ எடையுள்ள கேக்கை முதல்–அமைச்சர் நாராயணசாமி வெட்டினார். பின்னர் அதை கட்சியினருக்கு இனிப்பு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சோனியா காந்தி மட்டும்தான் தேசிய அளவிலான கட்சியில் 19 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்துள்ளார். மன்மோகன் சிங்கை பிரதமராக ஆக்கியவர்.

காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று தலைமை பதவிக்கு வந்து, கட்சியை வலுப்படுத்தினார். அதனால்தான் காங்கிரஸ் வலுவுடன் உள்ளது. காங்கிரஸ் கட்சி தான் பா.ஜ.க.வின் தவறுகளை சுட்டிக்காட்டி தோலுரித்து வருகின்றது.

சோனியா காந்திக்கு பிறகு ராகுல்காந்தி கட்சியின் தலைவராகி உள்ளார். அவரது கேள்விகளுக்கு மோடியால் பதில் தர முடியவில்லை. கவர்னர் கிரண்பெடி டுவிட்டருக்கு வந்தது முதல் நான் சமூக வலைதளங்களை பார்ப்பதில்லை. தற்போது பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் ஆட்களே வராததால் நாற்காலிகள் காலியாக இருப்பதாக வந்ததை அறிந்து பார்த்தேன்.

20 ஆயிரம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் 15 ஆயிரம் நாற்காலிகள் காலியாக இருந்தன. எந்த சமூக வலைதளங்கள் மூலம் பதவிக்கு வந்தாரோ அதுவே தற்போது மோடிக்கு எதிராக திரும்பியுள்ளது. அதுபோல் கவர்னர் கிரண்பெடிக்கும் சமூக வலைதளங்கள் எதிராகியுள்ளன.

நான் சமீபத்தில் டெல்லி சென்ற போது மத்திய மந்திரிகளை சந்தித்துப் பேசினேன். ஜனவரியில் தொடங்க உள்ள துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.300 கோடி தருவதாகவும், பிப்ரவரியில் தொடங்க உள்ள காரைக்காலில் ஜிப்மர் கிளை கட்டுமானப்பணிக்கு ரூ.500 கோடி தருவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் பரிந்துரையின்றி நயமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

என்.ஆர். காங்கிரஸ் 8 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணிக்கு 17 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு சுயேட்சை ஆதரவுடன் 18 பேர் உள்ளனர். என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்களில் எத்தனை பேர் அவர்களிடம் உள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் ஆட்சியை பிடிப்பேன் என்று கூறி வருகின்றார்.

புதுவைக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியான 6–வது, 7–வது ஊதியக்குழு பரிநதுரை பாக்கி ரூ.550 கோடி, திட்டமில்லா செலவுக்கான தொகை ரூ.1,250 கோடியை கேட்டு வருகின்றோம்.

குஜராத் தேர்தல் முடிவு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும். பிரதமர் வேறு வேலையே இல்லாமல் தினமும் குஜராத்தில் பிரசாரம் செய்து வருகிறார். 11–ந் தேதி ராகுல்காந்தி முறைப்படி தலைவராக அறிவிக்கப்படுவார். 2019–ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும்.

பிரதமர் மோடியை நம்பி ஓட்டு போட்டது தவறு என்பதை அனைத்து தரப்பு மக்களும் நம்ப தொடங்கியுள்ளனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசலுக்கான ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை காங்கிரஸ் ஆட்சியில் 140 டாலராக இருந்தது. தற்போது 40 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் அதன் மூலம் வரும் ஆண்டிற்கு 2 லட்சம் கோடியை செலவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை விட்டால் நாட்டை காப்பாற்ற எந்த அரசியல் கட்சியும் இல்லை. சோனியாவின் சீரிய ஆலோசனையின்படி ராகுல்காந்தி நாட்டை வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் துணைத் தலைவர்கள் வினாயகமூர்த்தி, நீல.கங்காதரன், தேவதாஸ், பொது செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story