கொதிக்கும் பூமியை குளிர்விக்கும் ஆசிரியர்
இயற்கையின் அற்புத கொடை, மரங்கள். அவை மழை எனும் மகத்தான வரத்தை நமக்கு தருபவை. அதன்மூலம் உயிர்களை காக்கும், உயிராக அவை திகழ்கின்றன.
இயற்கையின் அற்புத கொடை, மரங்கள். அவை மழை எனும் மகத்தான வரத்தை நமக்கு தருபவை. அதன்மூலம் உயிர்களை காக்கும், உயிராக அவை திகழ்கின்றன. இதனை உணர்ந்தோர் பலருண்டு. எனினும் இயற்கையை காக்க, மரம் வளர்ப்பில் அக்கறை கொண்டோர் மிகச்சிலரே. இதற்கு சமூக அக்கறை என்பதை கடந்து, மரங்கள் மீது ஒரு தீராக் காதலும் இருக்க வேண்டும்.
அந்த வகையில் மரங்களை நேசிக்கும் மனிதராக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா ஒடுகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பரமசிங் திகழ்கிறார். மரங்களை வெறுமனே நேசிப்பதோடு நிறுத்தாமல், உயிரும் உடலும் கொண்ட உடன் பிறப்பாக பார்க்கிறார். மரங்களால் மட்டுமே, கொதிக்கும் பூமியை குளிர்விக்க முடியும் என்பதை உணர்ந்த அவர், மரங்களை எல்லா இடங்களிலும் வளர்க்க முயற்சிக்கிறார். மேலும் சிறுகுடி கிராமத்தில் தனது வீட்டின் அருகில், நாற்றுப்பண்ணை அமைத்து மரக்கன்றுகளை வளர்த்து இலவசமாக வழங்குகிறார்.
ஆசிரியர் பரமசிங் தன்னை பற்றி அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா உசரவிளை எனது சொந்த ஊர். எனது பெற்றோர் பால்பாண்டியன்-பாக்கியஜோதிலட்சுமி. எனது தங்கை அன்னஜெகதா புதுக்கோட்டையில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நான் எம்.எஸ்சி.(விலங்கியல்), பி.எட் படித்துள்ளேன்’ என்றார். திருமணமாகாமல் தனியாக வசித்தாலும், மரக்கன்றுகளின் துணையுடன் இருப்பதாக கூறுகிறார்.
மரம் வளர்ப்பில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தை விளக்குகிறார்:
‘‘எனக்கு சிறுவயதில் இருந்தே மரம், செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் உண்டு. எம்.எஸ்சி. விலங்கியல் படித்த பின் இயற்கை மீதான ஈடுபாடு அதிகமானது. ஈஷா அமைப்பின் பயிற்சி முகாமில் நான் கலந்துகொண்டபோது மரங்களின் பயன்கள், அவை வளரும் விதம் தொடர்பான வீடியோகாட்சி ஒன்றை காண்பித்தார்கள். அதனை பார்த்தபோது மரங்கள் மீது இருந்த ஈர்ப்பு எனக்கு அதிகமானது. இறைவழிபாட்டின் நோக்கமே இயற்கையை நேசித்தல்தான் என்பதை புரிந்து கொண்டேன். எனவே, நான் வசிக்கும் சிறுகுடி பகுதிகளில் மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கினேன். இதற்காக ஆல், அரசு, வேம்பு விதைகளை சேகரித்து வந்து மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் போட்டு, மரக்கன்றுகளை வளர்த்தேன்.
அந்த கன்றுகளை குளங்கள், பள்ளிகளில் நடவு செய்தேன். மரக்கன்று வளர்ப்புக்கு முறையான பயிற்சியை நான் பெறவில்லை. அதனால் எனது தொடக்க முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. முயற்சியையே பயிற்சியாக கொண்டு தற்போது மரக்கன்று வளர்ப்பு, பராமரிப்பில் அனுபவம் பெற்று விட்டேன்.
சிறுகுடியில் உள்ள என் வீட்டில் நான் மட்டுமே தனியாக வசித்து வருகிறேன். முதலில் வீட்டின் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில் மரக்கன்றுகளை வளர்த்தேன். பின்னர் 35 சென்ட் நிலத்தை வாங்கி, அதில் நாற்றுப்பண்ணை அமைத்து மரக்கன்றுகளை வளர்த்து வருகிறேன். மரக்கன்றுகள் வளர்ப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளில் ஏழரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். தற்போது 50 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ந்து வருவதால், மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. எனது பெற்றோர் ஆதரவாக இருக்கிறார்கள். எனவே, செலவை பற்றி கவலைப்படுவது இல்லை. பாலித்தீன் பைகளில் நிரம்பிய மண்ணை முட்டி மோதி விதைகள் முளைத்து வெளியே வந்து கன்றாக மாறும்போதும், அதை தினமும் பராமரிக்கும் போதும் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அதை அனைவரும் அனுபவிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
முதலில் நத்தம் ஒன்றியத்தில் 100 பள்ளிகளுக்கு 3 ஆயிரம் மரக்கன்றுகளை கொடுத்தேன். அதன்பின்னர் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்து பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்களுக்கு கொடுத்துள்ளேன். தற்போது அரசு, ஆல், இச்சி, இலுப்பை, அத்தி, வேம்பு, பூவரசு என 15 வகையான மரக்கன்றுகள் இருக்கின்றன. உள்ளூர், வெளியூர் மக்கள் ஆர்வமுடன் நேரில் வந்து மரக்கன்றுகளை வாங்கி செல்கின்றனர். மரம் வளர்ப்பில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம், என்னை மேலும் ஊக்குவிப்பதாக இருக்கிறது.
அரசு, அத்தி, இலுப்பை, இச்சி, ஆலமரங்களை பால் மரங்கள் என்பார்கள். அவை அதிக அளவில் ஆக்சிஜனை தருபவை. இந்த வகை மரங்கள் நிற்கும் இடம் குளுமையாக இருக்கும். இதனால் மழைமேகங்கள் அந்த மரங்கள் நிற்கும் பகுதிக்கு வந்தாலே மழை பொழிந்து விடும். கார்மேகங்களை ஈர்க்கும் சக்தி அந்த மரங் களுக்கு உண்டு. பூமிக்கு தற்போது உடனடி தேவையாக இருப்பது இந்த வகை மரங்களே. அதனால் தான் அந்தவகை மரங்களை ஏரிகள், குளங்கள், கோவில் வளாகங்களில் அதிக அளவில் முன்னோர்கள் நட்டு வளர்த்தனர். எதிர்கால சந்ததி மீது அவர்களுக்கு இருந்த அக்கறை, பொறுப்பு நமக்கும் இருக்கிறது. எனவே தான் நானும் அதுபோன்ற மரங்களை அதிகம் வளர்த்துக் கொடுக்கிறேன். மரம் வளர்க்க மனம் இருந்தால் மட்டும் போதும். ஒருவர் 3 மரங்களை வளர்க்க, தினமும் 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. தொடர்ந்து 3 ஆண்டுகள் பராமரித்தால் அதன்பின்னர் தானாகவே மரங்கள் வளர்ந்து விடும்’’ என்றார்.
மரம் வளர்ப்பில் இவர் மாணவர்களை அதிகம் பயன்படுத்துகிறார். அதுபற்றி கேட்டபோது, ‘‘சிறுவயதில் எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். வாலிப பருவம் வந்து விட்டால் வேலைக்கு செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனை உருவாகிவிடும். எனவே தான் மரம் வளர்ப்புக்காக மாணவர்களை தேர்வு செய்கிறேன். இதற்காக பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை கொண்டு செல்வேன். காலை வழிபாட்டு நேரத்தில் மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், அதனால் கிடைக்கும் அனுபவம் குறித்து பேசுவேன். அதையடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் தாமாக முன்வந்து மரம் வளர்ப்பில் ஈடுபட போவதாக கூறுவார்கள். அவர்களுக்கு பள்ளி வளாகம், சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க அறிவுரை கூறுவேன். தினமும் தண்ணீர் ஊற்றி, பராமரித்து மரம் வளர்வதை பார்த்து விட்டால் மாணவர்கள் அதை இறுதிவரை கைவிடமாட்டார்கள். நான் பணியாற்றும் பள்ளியில் சிறிய அளவில் நாற்றுப்பண்ணை அமைத்துள்ளேன். அங்குள்ள மரக்கன்றுகளை பராமரிப்பதில் என்னுடன், மாணவர்களும் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.
முதன்முதலில் நான் வளர்த்த மரக்கன்றுகள், பள்ளிகள் மற்றும் குளங்களின் கரைகளில் ஓரளவு வளர்ந்த மரமாக மாறி இருக்கின்றன. அதை பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வெயில் நேரத்தில் அந்த மரங்களின் நிழலில் யாரேனும் ஒதுங்கி நின்று இளைப்பாறுவதை பார்க்கவே பெருமையாக இருக்கும்.
நான் வசித்த பகுதிகளில் தொடங்கி தற்போது பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை கொடுத்து வரு கிறேன். இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்க இருக்கிறேன். அடுத்த ஆண்டு கூடுதலாக மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க திட்டம் வைத்துள்ளேன். இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், குளங்களில் 2 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
இவரது மனமும் மரம் போன்று நல்ல பலன் அளிக்கிறது!

Related Tags :
Next Story