மூங்கில் வீட்டு ‘தங்கம்’


மூங்கில் வீட்டு ‘தங்கம்’
x
தினத்தந்தி 10 Dec 2017 9:46 AM IST (Updated: 10 Dec 2017 9:46 AM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநிலத்திலுள்ள ஹவுகாத்தி நகரில் சமீபத்தில் நடந்த உலக மகளிர் இளையோருக்கான குத்துச் சண்டை போட்டியில் 5 வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்கள்.

சாம் மாநிலத்திலுள்ள ஹவுகாத்தி நகரில் சமீபத்தில் நடந்த உலக மகளிர் இளையோருக்கான குத்துச் சண்டை போட்டியில் 5 வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்கள். அவர்களில் அங்குஷிதா போரோவும் ஒருவர். இவர் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர். பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவருடைய வீடு மண் மற்றும் மூங்கில்களால் கட்டமைக்கப்பட்டவை. மலைக்கிராமத்தில் பிறந்த அங்குஷிதா குத்துச்சண்டை வீராங்கனையாக மாறியது எப்படி?

‘‘எனது கிராமத்தில் உள்ளவர்கள் யாருக்கும் குத்துச்சண்டையை பற்றி எதுவும் தெரியாது. நான் குத்துச்சண்டை பயிற்சி பெற ஆசைப்பட்டபோது என்னுடைய கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நான் வசித்த பகுதியில் குத்துச்சண்டை என்றால் என்ன என்றே தெரியாத நிலைதான் இருந்தது. என்னுடைய உறவினர் ஒருவருடைய உதவியுடன் குத்துச்சண்டை பயிற்சியை தொடங்கினேன். அப்போது நான் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன். அதனால் என்னால் வெளியிடங்களுக்கு பயணம் செய்யமுடியாத நிலை இருந்தது. விடுதிக்கு வந்து எனது அம்மாதான் என்னை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்வார். நாங்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் வாடினோம்’’ என்கிற அங்குஷிதா 2013-ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனைக்கான விருதும், 2015-ம் ஆண்டில் மாநில அளவில் தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறார். தற்போது தங்கப் பதக்கம் வெற்றிருப்பதன் மூலம் கிடைக்கும் நிதியில் தன்னுடைய மூங்கில் வீட்டை கட்டிடமாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார்.

‘‘கடந்த முறை கஜகஸ்தான் சென்றிருந்தபோது என்னுடைய தினசரி செலவுக்காக கொடுக்கப்படும் பணத்தை சேமித்து சகோதரிகளுக்கு குளிர்கால உடை வாங்கி கொடுத்தேன். இப்போது பதக்கம் வென்றதால் கிடைக்கும் நிதியை கொண்டு எனது மண் வீட்டை சிமெண்ட் வீடாக மாற்ற முடிவு செய்திருக்கிறேன். அது என் பெற்றோருக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக அமையும்’’ என்று மனம் பூரிக்கிறார்.

இதற்கிடையே உலக மகளிர் இளையோருக்கான குத்துச் சண்டை போட்டியில் அங்குஷிதா தங்கப்பதக்கம் வென்றதையடுத்து அசாம் அரசு அவருக்கு ரூ.10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கி இருக்கிறது.

Next Story