இன்பமே இன்னும் வா என்.சி.மோகன்தாஸ்


இன்பமே இன்னும் வா என்.சி.மோகன்தாஸ்
x
தினத்தந்தி 10 Dec 2017 10:13 AM IST (Updated: 10 Dec 2017 10:13 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கடும் உயிர் சேதம் ஏற்படுகிறது.

முன்கதை சுருக்கம்:

ந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கடும் உயிர் சேதம் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் மீடியாவில் பணிபுரியும் சுவீகாவும், மணீசும் அந்த வழியாக காரில் சென்றதால் அவர்களும் விபத்தில் சிக்குகிறார்கள். அதில் காயமடைந்த சுவீகா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவளது பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா கொலை செய்யப்படுகிறாள். அந்த கொலைக்கு சுவீகாவே காரணம் என்று போலீஸ் சந்தேகம் கொள்கிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்துவிட, மெக்கானிக் மாணிக்கமும் விபத்தில் சிக்கி இறக்கிறார். இதற்கிடையே டி.எஸ்.பி. சந்தோஷ் மணீசுடன் சேர்ந்து விசாரணையில் இறங்குகிறார். பழைய காதலனின் நினைவுகளில் மூழ்கியிருந்த சுவீகா திடீரென்று மனம் மாறுகிறாள். மணீசை திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புகிறாள். அவனும் சம்மதிக்கிறான். அந்த நேரத்தில் போனில் அவளது ஆபாச வீடியோ ஒன்று வருகிறது. அதை பார்த்து சுவீகா அதிர்ந்து போகிறாள். இதற்கிடையே கடத்தப்பட்டதாக கருதப்பட்ட ரத்னாகர் தனது பினாமி ரமணியுடன் ரகசியமாக ஒரு இடத்தில் தங்கி இருப்பது தெரியவருகிறது. அவர் தன் மகன் நகிலன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இந்தநிலையில், துபாயில் இருந்து விமானத்தில் வரும் கமாலின் உதவியுடன் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க டி.எஸ்.பி. சந்தோஷ் வியூகம் வகுக்கிறார்.

விமான நிலையம்.

பகலைக் காட்டிலும் இரவில் அங்கு ஜொலிப்பு அதிகம். சலசலப்பும் அதிகம். பயணிகள் வருவதும், போவதும், அவர்களை வரவேற்க வெளியே கால் கடுக்க நிற்பதும், டாக்ஸி வேணுமா என டிராலியுடன் வருபவர்களை மறிப்பதுமாக முன்பகுதி இருக்க-

உள் பக்கம்-

குப்பை பைகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் லாரி ஒன்று நின்றிருந்தது. அதில் அவைகள் ஏற்றப்பட்டதும், சுரேஷ் "ஓ.கே.! கிளம்புங்க!’’ என்றான்.

அந்த லாரி புறப்பட்டதும், அவன் ஏர்போர்ட்டுக்குள் இருந்து, முன் பகுதி வழி வெளியே வந்து தன் காரில் தொற்றினான்.

மணீஷ், ‘‘சார்.. அவன் வண்டில கிளம்பிட்டான்’’ என போனில் சொல்ல,

‘‘தெரியும். நான் அவனை வேறு வாகனத்தில் பாலோ பண்ணிட்டிருக்கேன்"

‘‘நான் என்ன செய்யட்டும்!’’

‘‘அந்த அரை பாடி வண்டி வருது பாரு..’’

‘‘குப்பை வண்டி!’’

‘‘ஆமா.. அதை நீ டாக்ஸில பாலோ பண்ணு!’’

அந்த லாரி உறுமி, புகை கக்கி, ஆடி... ஆடி.. தாம்பரம் தாண்டி தரிசாய் கிடந்த பூமியில் மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பையிடம் நின்றது.

‘‘சார்.. லாரி குப்பையை கொட்டிட்டு கிளம்புது’’

‘‘சரி.. நீ அங்கேயே இரு.. கார் ஒண்ணு வருதா..!’’

‘‘ஆமாம் சார். அதிலிருந்து அட.. அந்த சுரேஷ் இறங்குறான். காரின் லைட் வெளிச்சத்துல குப்பைகளை அலசறான். டார்ச் எடுத்து புரட்டிப் போட்டு பை ஒன்றை தூக்குறான்.. தூக்கி போய் தன் காரில் போட்டு, வண்டியை கிளப்புறான்’’

‘‘நல்லது. டாக்ஸியை அனுப்பிட்டு அங்கேயே நில்லு. உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்!’’

சற்று நேரத்தில் சுரேஷின் கார்.. பல்லாவரம் மெயின் ரோட்டில் பயணித்து அருகில் உள்ள மேம்பாலத்தை நெருங்கின போது, ‘‘சுரேஷ்! அப்படியே வண்டியை ஓரங்கட்டு!’’ என்று மெஸேஜ் வந்தது.

நிறுத்தினான். செல் ஒலிக்க, ‘‘ஆமாம் சார். குப்பை தொட்டிக்கிட்ட ஒரு சிவப்பு பை கிடக்குது..’’

‘‘அந்த பையை குப்பை தொட்டில போட்டுட்டு நீ கிளம்பு!’’

‘‘அப்போ நான் அங்கே வர வேணாமா..?’’

‘‘வேணாம். எவனாவது உன்னை தொடரக்கூடும்!’’

அவன் குப்பை பையை போட்டுவிட்டு கிளம்பினதும், பெண் ஒருத்தி ஸ்கூட்டரில் வந்திறங்கி, அந்த பையை எடுத்துக் கொண்டு வண்டியை கிளப்பினாள்.

கொஞ்சம் தள்ளி காருக்குள் இருந்த மணீஷ்.. ‘‘சார்.. அவளைப் பார்த்தா நர்ஸ் கீதா மாதிரி தெரியுது!’’

‘‘ஆமாம். அவளே தான்!’’ சந்தோஷ் புன்னகைத்தார்.

‘‘அவ உங்க கஸ்டடியிலன்னு சொன்னீங்க..!’’

‘‘எஸ்.. இப்பவும் என் கஸ்டடியிலதான் இருக்கா!’’

‘‘சார்! பறந்து போயிட்டா. வண்டியை வேகமா விடச் சொல்லுங்க!’’

‘‘வேணாம். அவ எங்கேப் போவான்னு எனக்குத் தெரியும். நாம நேரா அங்கேப் போயிடலாம்!’’

‘‘எங்கே..?’’

‘‘இந்த குப்பையை சேர்க்கப் போகிற பங்களா இங்கே குபேரன் நகர் ரெண்டாவது தெருவுலதான் இருக்கு!’’

‘‘சார்.. என் மண்டை காயுது. அந்த குப்பை பையில அப்படி என்னதான் இருக்கு...?’’

‘‘போதை மருந்து. குவைத்திலிருந்து இங்கே கடத்தப்பட்டிருக்கிறது’’

‘‘எப்படி..?’’

‘‘அங்கே கிளீனிங் பசங்க விமானத்தை சுத்தப்படுத்தி விட்டு ஏதாவது ஒரு சீட்டுக்கு அடியில் அல்லது டாய்லெட்டுல வெச்சிடுவானுங்க. இங்கிருக்கிற பசங்க அதை எடுத்து வந்து..’’

‘‘இப்போ புரியுது! இதையெல்லாம் செய்யறது யாரு..? அந்த சுரேஷா..?’’

‘‘அவன் ஒரு குருவி. கருவி மட்டுமே!’’

‘‘ஆனா.. அவனை போகவிட்டுட்டீங்களே! ஏர்போர்ட்டுலேயே கையும், களவுமா பிடிக்க வேண்டியதுதானே!’’

‘‘ஏர்போர்ட்டுல பிடிச்சா அவன் மட்டும்தான் மாட்டுவான். இப்போ மொத்த நெட் ஒர்க்கும் சிக்குமே!’’

‘‘அப்போ சுரேஷை விட்டுடுவீங்களா..?’’

சந்தோஷ் சிரித்து, ‘‘போலீஸ் அவனை பிடித்தாயிற்று. இதோ பார் வாட்ஸ் ஆப்பில் போட்டோ"’

‘‘சார்.. இதுக்கெல்லாம் பின்னணியில் இருப்பது யாருன்னு உங்களுக்கு தெரியுமா..?’’

‘‘தெரியும்.. ஆனா தெரியாது’’

‘‘மறுபடியும் குழப்பறீங்க!’’

‘‘ஆளைத் தெரியும். ஆனால் ஆதாரத்துடன் பிடிக்கிறவரை வெளியே தெரிவிக்கக் கூடாதே!’’

‘‘எப்போதான் தெரிவிப்பீங்களாம்’’

‘‘இன்னும் பத்து நிமிஷத்துல’’

மணீஷ் பிரமித்து அமர்ந்திருக்க, அப்போது வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல்! அதை அவர் அவனிடம் காட்டி, ‘‘ஆசாமி கையும் களவுமாய் பிடிபட்டுட்டான். இதோ போட்டோ!’’

அவன் அதை ஆவலுடன் பார்த்து, ‘‘யார் சார் இது..? புதுமுகம்!’’

‘‘இல்லை. பழைய முகம்தான். லகுவான கடத்தல் பேர்வழி. மந்திரி மகன் நகிலனின் பிசினஸ் பார்ட்னர். பேரு.. நிக்ஸன்’’

----

மறுநாள். அடையாறு பங்களா.

பலத்த பாதுகாப்பிற்கிடையே அறைக்குள் அந்த நிக்ஸன் ஓரம் கட்டப்பட்டிருந்தான்.

எதிரே நீதிபதி, போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் சந்தோஷ்! நான்கு பக்கமும் கேமிராக்கள்!

நீதிபதி கண்காட்ட சந்தோஷ்.. ‘‘நிக்ஸன் தம்பி! இந்த கேஸ் என் கைக்கு வந்த பின் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கோர்த்து வச்சிருக்கேன். அதனாலே.. எங்கே - எப்போ - எப்படி - எதுக்கு - என்னென்ன நடந்ததுன்னு நீயே சொல்லிட்டால் நல்லது’’ என்று புன்னகைத்தார்.

‘‘இங்கே உன்னை சுற்றி பாதுகாப்பு கூண்டு! உன்னை காப்பாற்றவோ, ஆதரவு தெரிவிக்கவோ நகிலன் கூட கிடையாது. அவனை ஏற்கனவே தூக்கியாச்சு. இப்பவும் பக்கத்து அறையில்தான் அவனும்! கமான்..’’

நீண்ட மவுனத்திற்கு பிறகு நிக்ஸன் பேச ஆரம்பித்தான். அவனுடைய குரலில் கரகரப்பு.

‘‘சின்ன வயதிலிருந்தே செல்வம் - சொகுசுக்கு நான் அடிமையாகியிருந்தேன். வளர வளர மனது சீரழிந்து, அராஜகமாயிற்று. பணம் - மது - மாது என அலைச்சல்!

அப்படி சிக்கினவளில் ஒருத்திதான் ரம்யா. அவளது வசீகரத்தில் மயங்கி - ரொம்பவே இடம் கொடுத்துட்டேன். அதனால் கர்ப்பம்! கல்யாணத்துக்கு வற்புறுத்தினாள்.

கேரளத்தில் அதிரப்பள்ளியில் எனது ரிசார்ட் விசிட்டிற்குப் போனபோது சுவீகாவை சந்தித்த விவரத்தைச் சொல்லி இருந்தாள். அதை அப்போது நான் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் மீடியா என்பதால் எங்காவது பயன்படுவாள்- பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விட்டுவைத்திருந்தேன்.

மந்திரி ரத்னாகர், தன் குடும்பத்தை நம்பாமல், சின்ன வீட்டுக்கு சாதகமாய் இருந்தார். தன் பால்ய நண்பன் ரமணியை பினாமியாக்கி தன் குடும்பத்தை டம்மியாக்கவே, நகிலன் எனது உதவியை நாடினான். அவர்கள் இருவரையும் பிரிக்க வேண்டும் என்றான். அந்த நேரம் மணீசும் சுவீகாவும் ரத்னாகர் பற்றிய ஊழல் டாகுமெண்ட்ரி எடுத்திருப்பது தெரியவே, அதை சேனலில் நிறுத்திவிட்டு ரெய்டுக்கு ஏற்பாடு செய்தேன்.

அதற்கு காரணம் சுவீகா என நினைத்து மந்திரி அவளை தண்டிக்க வேண்டும் என்றார். சுவீகா என்றாவது ரம்யாவிற்கு சாதகமாய் கிளம்பினால் மிரட்ட பயன்படும் என்று மெக்கானிக் மாணிக்கம் மூலம் அவளது வீட்டில் ரகசிய கேமிரா பொருத்தினேன். ஆனாலும் கூட சுவீகா என்றாவது தேவைப்படுவாள் என விட்டு வைத்தேன். மந்திரிக்கும் ரமணிக்குமிடையே மனஸ்தாபம் ஏற்படுத்தி பிரிக்க வைக்க வேண்டி ஷாப்பிங் காப்ளக்ஸை தகர்க்க வைத்தேன்’’

‘‘இதில் டிரைவர் கோதண்டத்தின் பங்கு..?’’ ‘‘அவன் என் பர்சனல் டிரைவர். கேரள பயணத்தின்போது ரம்யாவுடன் இருந்தது அவன்தான். ரம்யாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டபோது, விஷயம் அறிந்து கோதண்டம் என்னிடமிருந்து விலகி ரமணியிடம் போய் சேர்ந்து கொண்டான். அதனால் அவனை காலி பண்ண மெக்கானிக் மாணிக்கம் மூலம் டிரக் விபத்து ஏற்பாடு! ஆனால் எப்படியோ தகவலறிந்து அவன் தப்பிவிட்டான். அது மட்டுமில்லாமல் ஏர்போர்ட் - போதை மருந்து கடத்தல் விஷயம் அவனுக்கு தெரிந்து விடவே தீர்த்துக் கட்டினேன்"

‘‘மாணிக்கம்? உனக்கு உதவின அவனை ஏன்..’’ ‘‘எல்லாம் அவனது பேராசை! ரம்யாவை கொன்றதை அறிந்து என்னிடம் பணம் பறிக்க முயன்றான். அதனால்..’’

‘‘மருத்துவமனையில் ரம்யாவை கொன்றது சுரேஷா?’’

‘‘ஆமாம். போதை மருந்து கடத்தலுக்கு தனது கிளீனிங் கம்பெனி மூலம் அவன் எனக்கு பார்ட்னர்! சுரேஷ், தன் காதலி நர்ஸ் கீதாவின் உதவியால் ரம்யாவை கொலை செய்தான்! இடையில் சுவீகாவின் விபத்து - அவள் அதே மருத்துவமனையில் அனுமதி எல்லாம் எதிர்பாராத திருப்பம். அப்புறம் - சுவீகா, ரம்யாவின் மரணத்தை தோண்ட ஆரம்பிக்கவே அவளது ஆபாச படத்தை அனுப்பி மிரட்டினேன்.

இதற்கிடையில், மந்திரி ரத்னாகரின் பதவி பறிப்பு - அவரை கடத்தி டிராமா பண்ண வேண்டும் என்று நகிலன் விரும்பினான். ஆனால் முதல்வர் அவரை வேறு மாதிரி கொண்டு போய் காப்பாற்றி விட்டார். மாற்று திட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது உங்களது நடவடிக்கைகளை நான் கவனிக்கவில்லை. நீங்கள் அங்கே இங்கே என அலைந்து - குவைத் வரை ரூட்டு போட்டு போதை மருந்து கடத்தலை மடக்குவீர்கள் - பிடிப்பீர்கள் - நானும் மாட்டுவேன் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எல்லாம் எனது பேராசை! பணம் - பதவி - செல்வாக்கு இருந்தால் என்ன அராஜகம் வேண்டுமானாலும் செய்யலாம் - சட்டம் கிட்டே வராது என நினைத்தேன். ஐ யம் டோட்டலி பெயில்ட்’’

நிக்ஸனின் வாக்குமூலம் அத்தனை சேனல்களிலும் அப்போது ‘லைவ்’ ஆகிக் கொண்டிருந்தது.

(முற்றும்)

அடுத்த வாரம்: சுபா எழுதும் விறுவிறுப்பான ‘காணாமல் போன நிலா’ காதல் தொடர் கதை ஆரம்பம்!

Next Story