நடுரோட்டில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு வெட்டு 2 பேர் பிடிபட்டனர்; ஒருவர் தப்பி ஓட்டம்
நாகர்கோவிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை, மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர்கள் வாளால் வெட்டினர். இதில் 2 பேரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கட்டையன்விளையை சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 68). இவருடைய மகள் ரெஜி. இவரை புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது ரெஜிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மகளின் குழந்தையை பார்ப்பதற்காக ரெத்தினம் தன் குடும்பத்தினருடன் காரில் புத்தளத்துக்கு சென்று விட்டு மாலையில் வீடு நோக்கி திரும்பினார்.
காரில், ரெத்தினத்தின் மகன் ரெஜூ (32), ரெஜூ மனைவி அஜிதா (32), உறவினர் பத்மாவதி (47) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராசையன்(69) ஆகியோர் இருந்தனர். கார் வெட்டூர்ணிமடம்–கட்டையன்விளை சாலையில் சென்ற போது, எதிரே 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக காருடன், வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் உரசியதாக தெரிகிறது.
இதனால் பதற்றமடைந்த ரெத்தினத்தின் குடும்பத்தினர் பயத்தில் அலறினர். இதைத் தொடர்ந்து கார் சாலை ஓரம் நிறுத்தப்பட்டது. பிறகு கீழே இறங்கி வந்த ரெத்தினம், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை கண்டித்தார். அப்போது வாலிபர்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர்களில் ஒருவன், மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த வாளால் ரெத்தினத்தை வெட்டினார். இதை தடுக்க வந்த ரெஜூ, பத்மாவதிக்கும் வெட்டு விழுந்தது. நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள், அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் அவர்களிடம் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட 2 பேருக்கும் தர்ம அடி விழுந்தது. இதற்கிடையே படுகாயமடைந்த ரெத்தினம் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் அங்கு விரைந்து வந்து பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், வாலிபர்கள் 3 பேரும் கட்டையன்விளையை சேர்ந்த ஸ்ரீராஜ், ஆகாஷ், மணி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வடசேரி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட ஸ்ரீராஜ், ஆகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மணியை வலைவீசி தேடி வருகின்றனர். நாகர்கோவிலில் பட்டப்பகலில் நடுரோட்டில் 3 பேரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.