சோழவரம் ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது சேற்றில் சிக்கி வாலிபர் சாவு
சோழவரம் ஏரியில் நண்பர்களுடன் குளித்த போது சேற்றில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
செங்குன்றம்,
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 2–வது தெருவைச் சேர்ந்தவர் கபாலி. இவரது மகன் கதிரவன் (வயது 18). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கதிரவன் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான விக்னேஷ், சந்தோஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சோழவரம் ஏரிக்கு குளிக்க சென்றார்.
அவர்கள் 3 பேரும் சோழவரம் ஏரியில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். அப்போது கதிரவன் திடீரென குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதில் சிறிது நேரத்தில் கதிரவன் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.