லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவு நண்பர் படுகாயம்


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவு நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Dec 2017 3:45 AM IST (Updated: 11 Dec 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். அவருடன் சென்ற நண்பர் படுகாயமடைந்தார்.

பழனி,

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் கவுதம் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய நண்பர், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் விஷ்ணு (19). இவரும் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கவுதம் தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.

அதன்படி 4 மோட்டார் சைக்கிள்களில் கவுதம் மற்றும் நண்பர்கள் புறப்பட்டனர். இதில் கவுதம் ஓட்டிய மோட்டார் சைக்கிளில் விஷ்ணு பயணம் செய்தார். பழனி நால்ரோடு அருகே இவர்கள் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடியது.

அதனை கவுதம் கட்டுக்குள் கொண்டுவர முயன்றார். ஆனால் அதற்குள் முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் கவுதமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஷ்ணுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்த பழனி நகர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story