மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்வு


மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 Dec 2017 4:30 AM IST (Updated: 11 Dec 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள வே.புதுக்கோட்டையை சேர்ந்தவர் இளங்கோவன். அவருடைய மனைவி ஜானகி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 11). காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவள், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டாள். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக் கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். இருப்பினும் அவளுக்கு காய்ச்சலின் அளவு குறையவில்லை. இதையடுத்து அவள், நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள். மர்மகாய்ச்சல் பாதிக்கப்பட்டு பிரியதர்ஷினி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் வே.புதுக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

வேடசந்தூர் பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 8 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையில் பிரியதர்ஷினியும் இறந்துள்ளதால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாணவி இறந்ததை தொடர்ந்து, வே.புதுக்கோட்டை ஊராட்சி செயலர் ராமசாமி தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். தெருக்களில் கிடந்த குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டு பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டன. மேலும் கொசு புகைமருந்தும் அடிக்கப்பட்டன.


Next Story