காசிமேடு: பூமிக்கு அடியில் இருந்து ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு


காசிமேடு: பூமிக்கு அடியில் இருந்து ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Dec 2017 3:45 AM IST (Updated: 11 Dec 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணியின் போது பூமிக்கு அடியில் இருந்து ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராயபுரம்,

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக 17 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக காசிமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், கடற்கரை கிராமங்களில் எண்ணெய் குழாய் அமைப்பதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதால் அந்த பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர்கள் அச்சம் வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நேற்று எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது. அங்கு குழாய் பதித்த பின்னர் பள்ளத்தை மூடும் போது, தொழிலாளர்கள் ‘ஏர் பம்ப்’ மூலம் மண்ணுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

அப்போது திடீரென 2 இடங்களில் இருந்து களிமண்ணுடன் ரசாயன கலவை வெளியேறியது. தொடர்ந்து வெளியேறிய ரசாயன கலவை அப்பகுதியில் ஆறுபோன்று ஓடியது. இதைக் கண்ட மீனவர்களும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சி.பி.சி.எல். அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். பின்னர் குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த ரசாயன கலவை அகற்றப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story