லட்சத்தீவு அருகே மீட்கப்பட்ட தோணி தொழிலாளர்கள் தூத்துக்குடிக்கு வந்தனர்


லட்சத்தீவு அருகே மீட்கப்பட்ட தோணி தொழிலாளர்கள் தூத்துக்குடிக்கு வந்தனர்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:30 AM IST (Updated: 11 Dec 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

லட்சத்தீவு அருகே ஒகி புயலில் சிக்கி மீட்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த தோணி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவில் ஊருக்கு வந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்த தம்யான் என்பவருக்கு சொந்தமான தோணி கேரள மாநிலம் நியூமங்களூரில் இருந்து லட்சத்தீவு அருகே உள்ள கவரத்தீவுக்கு கட்டுமான பொருட்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கடந்த மாதம் 28-ந் தேதி புறப்பட்டு சென்றது. இந்த தோணியில் தூத்துக்குடியை சேர்ந்த ஷெல்டன், அசோக் மரியலூர்து சந்தியாகு, ஜான்சன், மாரிசெல்வம், காளிதாஸ், ஹெரால்டு வில்சன், வல்லரியன் மற்றும் மங்களூரை சேர்ந்த வில்லியம் ஆகியோர் சென்றனர். இவர்கள் கடந்த 1-ந் தேதி கவரத்தீவு அருகே சென்று நங்கூரமிட்டு தோணியை நிறுத்தினர். இந்த நிலையில் ஒகி புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது, நங்கூரம் துண்டிக்கப்பட்டு தோணி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மங்களூர் கடலோர காவல்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது லட்சத்தீவு அருகே உள்ள அகட்டி தீவில் இருந்து 60 கடல் மைல் மேற்கு பகுதியில் தத்தளித்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று தூத்துக்குடியை சேர்ந்த 7 தோணி தொழிலாளர்கள் உள்பட 8 பேரையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட தோணி தொழிலாளர்கள் 7 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். குடும்பத்தினர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பனிமயமாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்தனர். பின்னர் தங்களை மீட்க உதவிய அரசுக்கும், கடலோர காவல்படையினருக்கும் நன்றி தெரிவித்தனர். 

Next Story