ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்


ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:30 AM IST (Updated: 11 Dec 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ- மாணவிகள் கடந்த 28-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 13-வது நாளாக பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வின் கிங்ஸ் ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார். நேற்று மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் 550 டாக்டர்கள் நியமனத்தில் அரசு ஏற்கனவே அறிவித்த நடைமுறையை பின்பற்றவில்லை. எனவே இந்த பணி நியமனத்தை ரத்து செய்து, அந்த பணியிடத்தில் அரசு டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

பதிவுமூப்பு அடிப்படையில் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். புதிதாக நியமிக்கப்படும் டாக்டர்களுக்கு கிராமப்புற சேவையை கட்டாயமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

நெல்லை அரசு மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் தொடர்பாக அரசுத்துறை செயலாளர் அழைத்து பேசுவார் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அரசு, மாணவர்களின் போராட்டத்தை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

மாணவர்களின் போராட்டத்தால், நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மாணவர்களை அழைத்து பேசி, அவர்களின் போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story