சேலத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்தனர்: பள்ளி மாணவி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்


சேலத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்தனர்: பள்ளி மாணவி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:45 AM IST (Updated: 11 Dec 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவரது தோழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்,

சேலம் அரிசிபாளையத்தில் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சேலம் சங்கர்நகரை சேர்ந்த சக்திவேல் மகள் கவிஸ்ரீ (வயது 13), செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகள் ஜெயராணி (13) ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 8-ந் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவிகள் மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மாணவிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை சேலம் முதல் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து மாணவிகள் ஜெயராணி, கவிஸ்ரீ ஆகியோர் குதித்தனர். இதில் தலை சிதைந்து மாணவி ஜெயராணி சம்பவ இடத்திலேயே இறந்தார். அருகில் கவிஸ்ரீ உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கவிஸ்ரீயை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்துபோன மாணவி ஜெயராணியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாணவியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, மாணவி கவிஸ்ரீக்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவருக்கு பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதும், முதுகுதண்டுவடம் உடைந்திருப்பதும், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து கவிஸ்ரீக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவிகள் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்கள்? என்பது குறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், பள்ளியில் ஆசிரியை ஒருவர் திட்டியதால் மனமுடைந்து மாணவிகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும், இணை பிரியாத தோழிகளாக இருந்த அவர்களை ஆசிரியை பிரித்து தனித்தனியாக பெஞ்சில் அமர வைத்ததால் அந்த பிரிவை தாங்க முடியாத காரணத்தினால் இதுபோன்ற விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, எதற்காக தற்கொலை செய்யும் முடிவை எடுத்தீர்கள்? என்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவி கவிஸ்ரீயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் போலீசாரிடம் கூறும்போது, எனது தோழி ஜெயராணிக்கு தாயார் கிடையாது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அவரது தாயார் ஜெயமேரி இறந்துவிட்டார். இதனால் அவரது சித்தி செல்வராணி கொடுமை செய்து வருவதாகவும், அதை தாங்க முடியவில்லை என்றும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். நானும், அவளும் உயிருக்கு உயிராய் பழகி வந்தால் பிரிவதற்கு மனமில்லாமல் அவளுடன் சேர்ந்து தற்கொலை செய்ய முயன்றேன், என்றார்.

இந்தநிலையில், மாணவி ஜெயராணியின் தற்கொலைக்கு அவரது சித்தி செல்வராணி செய்த கொடுமை காரணமா? என்பது குறித்து டவுன் போலீசார் நேற்று அவரிடமும், மற்ற உறவினர்களிடமும் விசாரித்தனர்.

பள்ளியில் மாணவிகள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். வகுப்பறையில் எப்போதும் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதை ஆசிரியைகள் கண்டித்துள்ளனர். மேலும், பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். இதனால் தங்களை நிரந்தரமாக பிரித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் மாணவிகள் இருந்துள்ளனர். இதன் காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இது தான் காரணமா? அல்லது சித்தி கொடுமையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவி கவிஸ்ரீயிடம் போலீசார் விசாரித்தபோது, அவரது தோழி ஜெயராணி இறந்துபோன தகவலை அவரிடம் இதுவரை தெரிவிக்கவில்லை. பக்கத்தில் உள்ள மற்றொரு அறையில் ஜெயராணியும் சிகிச்சை பெற்று வருவதாகவே கூறி வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக பசியில் இருந்து வந்த கவிஸ்ரீ நேற்று தனது பெற்றோரிடம் சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 20 நாட்களுக்கு முன்பே மாணவிகள் ஜெயராணி, கவிஸ்ரீ ஆகிய இருவரும் தற்கொலை செய்வது குறித்து பேசிய படி இருந்ததாக அவர்களுடன் படித்து வந்த மாணவிகள் சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கைகளை அறுத்து கொள்ளலாமா? விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாமா? என்று ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இறுதியில் பள்ளியை விட்டு வெளியேறிய மாணவிகள் அன்றைய இரவு முழுவதும் காந்தி மைதானத்தில் தங்கியுள்ளனர். பிறகு கடைவீதிக்கு நடந்து சென்றபோது, யாருக்கும் சந்தேகம் வராதபடி நைசாக அந்த கட்டிடத்தின் மேல் பகுதிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவி கவிஸ்ரீயிடம் நேற்று முன்தினம் சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கலைவாணி வாக்குமூலம் பெற்றார். இதனால் மாணவி வாக்குமூலத்தில் என்ன சொல்லி இருக்கிறாரோ? அதன் அடிப்படையில் தான் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.


Next Story