சித்ரதுர்கா தாலுகா அலுவலகத்தில் ‘தீ’ ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின


சித்ரதுர்கா தாலுகா அலுவலகத்தில் ‘தீ’ ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின
x
தினத்தந்தி 11 Dec 2017 3:32 AM IST (Updated: 11 Dec 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா தாலுகா அலுவலகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.

சிக்கமகளூரு,

சித்ரதுர்கா டவுனில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் தரை தளம் உள்பட 3 அடுக்கு மாடிகளுடன் அமைந்துள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. காவலாளி மற்றும் ஒருசில துப்புரவு தொழிலாளர்கள் மட்டும் அங்கு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென அலுவலகத்தின் முதலாவது தளத்தில் இருந்து புகை வந்தது. முதல் தளம் முழுவதும் ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்தது. புகை வந்ததைப் பார்த்த காவலாளியும், துப்புரவு தொழிலாளர்களும் உடனே அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு ஒரு அறையில் ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளியும், துப்புரவு தொழிலாளர்களும் உடனடியாக இதுபற்றி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தாசில்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஜோசி தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த சித்ரதுர்கா தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் முதல் தளத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களும் தீயில் கருகி சாம்பலாயின.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து சிதரதுர்கா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று சித்ரதுர்கா டவுனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story