‘எதிர்க்கட்சிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றன’ சட்டசபையில் முதல்–மந்திரி பட்னாவிஸ் பதில்


‘எதிர்க்கட்சிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றன’ சட்டசபையில் முதல்–மந்திரி பட்னாவிஸ் பதில்
x
தினத்தந்தி 12 Dec 2017 5:30 AM IST (Updated: 12 Dec 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் முதலை கண்ணீர் வடிப்பதாக சட்டசபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.

நாக்பூர்,

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் மந்திரி கோவிந்த்ராவ் சேஷ்ராவ், ராஜீவ் ரஜிலே உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சட்டசபையின் அலுவல் பணி தொடங்கியது. அப்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ‘‘விவசாயிகளின் துயரை போக்க மராட்டிய அரசு தவறிவிட்டது. பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு பல்வேறு தவறுகளை செய்துவிட்டது’’ என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், ‘‘விவசாயிகளின் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் முதலை கண்ணீர் தான் வடிக்கிறதே தவிர, அவர்களுக்கு துளியளவும் அக்கறை இல்லை. உண்மையில், முந்தைய காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு விவசாயிகளை பெருமளவு ஏமாற்றியது’’ என்றார். இவ்வாறாக விவாதம் நீடித்தது.

இதைத்தொடர்ந்து, சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய மந்திரி ராம் ஷிண்டே, ‘‘கூட்டத்தொடரின் முதலாம் நாள், உயிர் நீத்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை புறக்கணித்து, விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்தனர். இது நியாயமற்ற நடைமுறை’’ என்று கூறினார்.

இதேபோல், மேல்–சபையிலும் பயிர்க்கடன் தள்ளுபடி பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர். அப்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே (தேசியவாத காங்கிரஸ்), பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் அரசின் கூத்து வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், ‘கூத்து’ என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வார்த்தை பொருத்தமற்றது என்பதை கண்டறிந்தால், அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக மேல்–சபை தலைவர் ராம்ரஜே நிம்பல்கர் தெரிவித்தார்.

இதனால், ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபை முழுவதும் ஒத்திவக்கப்பட்டது. முன்னதாக, சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா உறுப்பினர் பிரசாத் லாட் எம்.எல்.சி. ஆக பதவியேற்றார்.


Next Story