என்ஜினீயரிங் மாணவியை காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் மாணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


என்ஜினீயரிங் மாணவியை காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் மாணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Dec 2017 3:45 AM IST (Updated: 12 Dec 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவியை காதலிக்க வற்புறுத்தி கொலைமிரட்டல் விடுத்ததாக பாலிடெக்னிக் மாணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேச்சேரி,

மேச்சேரியை அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவருடைய மகன் கார்த்திக்(வயது 22) இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். திருச்செங்கோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயது மாணவியை அவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த மாணவி தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பார். அதேநேரத்தில் கார்த்திக்கும், பாலிடெக்னிக் கல்லூரிக்கு செல்ல வருவார். கடந்த ஓராண்டாக மாணவியை அவர் ஒருதலையாக காதலித்து வருவதாக கூறி, தன்னை காதலிக்குமாறு அந்த மாணவியிடம் வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்த மாணவி இதை ஏற்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை காதலித்து திருமணம் செய்யாவிட்டால் குடும்பத்துடன் கொன்று விடுவேன் என்று கார்த்திக் அந்த மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு அவரது உறவினர்கள் தனபால், முருகன், கருப்பண்ணன், பிரபு ஆகிய 4 பேர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி சம்பவம் குறித்து மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாணவர் கார்த்திக் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே மாணவர் கார்த்திக்கை அந்த மாணவியின் உறவினர்கள் 3 பேர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில், அந்த மாணவியின் உறவினர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story