திருச்சியில் நூறு ஆண்டுக்கும் மேல் பழமையான வணிக வளாக கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது


திருச்சியில் நூறு ஆண்டுக்கும் மேல் பழமையான வணிக வளாக கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது
x
தினத்தந்தி 12 Dec 2017 4:30 AM IST (Updated: 12 Dec 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நூறு ஆண்டுக்கும் மேல் பழமையான வணிக வளாக கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மலைக்கோட்டை,

திருச்சி பழைய ராஜா தியேட்டர் எதிரே மதுரை சாலையையும், மேலப்புலிவார்டு சாலையையும் இணைக்கும் சாலையில் அம்மா உணவகம் அருகே ஜான் பஜாரில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வந்தது.

நூறு ஆண்டுக்கும் மேல் பழமைவாய்ந்த இந்த வணிக வளாகத்தில் தரைத்தளத்தில் 6 கடைகள் இயங்கி வந்தன. நகை அடகு கடை, கைக்கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடை, செல்போன் பழுது பார்க்கும் கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. மாடியில் ஒரு குடும்பத்தினர் குடியிருந்தனர்.

நேற்று மாலை 5 மணி அளவில் இந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள கடையில் மண் சரிந்து சுவர் தரைக்குள் அமுங்குவது போல் தெரிந்தது. இதனை கவனித்த ஒரு வியாபாரி உஷார் அடைந்து மற்ற கடைக்காரர்களையும் எச்சரிக்கை செய்தார். உடனே இதுபற்றி தீயணைப்பு துறை, மாநகராட்சி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினரும் வந்தனர். அவர்கள் ஆய்வு செய்தபோது கட்டிடம் வலுவிழந்து போய் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுவது போல் காட்சி அளித்தது.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் முதல்கட்டமாக கடைகளில் இருந்த வியாபாரிகளிடம் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். உடனே வியாபாரிகள் அனைவரும் மேஜை, நாற்காலி மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். மாடியில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் ஏற்கனவே காலி செய்து போய்விட்டதால் அங்கு யாரும் இல்லை. எனவே அந்த கட்டிடத்தை இடிக்கும் பணியை உடனே தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.

கட்டிடம் இடிக்கும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடாமல் தடுக்க, முதலில் அந்த பகுதியில் உள்ள அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அந்த கட்டிடம் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்டதை ஏராளமானவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் அந்த பகுதியிலும், மதுரை சாலையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். மதுரை சாலையிலும், மேலப்புலிவார்டு ரோடு பகுதியிலும் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை திருப்பி விட்டனர்.

இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தின் தன்மையை தெரிந்துகொண்டு, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. துரிதமாக செயல்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாராட்டினார்கள். 

Next Story