சித்தராமையா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல்
கர்நாடகத்தில் ரூ.3,427 கோடி மதிப்பீட்டில் 4 தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு சித்தராமையா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் வழங்கியது.
பெங்களூரு,
முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் மாநில உயர்மட்ட குழுவின் கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது தலைமையில் நடைபெற்ற தொழில் முதலீட்டு திட்டங்களுக்கான மாநில உயர்மட்ட குழு கூட்டத்தில் கர்நாடகத்தில் ரூ.3,427 கோடி மதிப்பீட்டில் 4 தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் 2,595 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். போயிங் இந்தியா என்ற தனியார் நிறுவனம் ரூ.1,152 கோடியில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப வசதி உற்பத்தி நிறுவனத்தை தொடங்குகிறது. இந்த நிறுவனத்தில் 2,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சி.டி.சி டெவலப்மெண்ட் இந்தியா என்ற தனியார் நிறுவனம் ரூ.740 கோடியில் தனது நிறுவன கிளையை பெங்களூருவில் தொடங்குகிறது. மேலும் தொழில்நுட்ப பூங்காவை அந்த நிறுவனம் அமைக்கிறது. இந்தியன் கோஸ்ட் கார்டு நிறுவனம் ரூ.1,010 கோடியில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு படை பயிற்சி மையத்தை அமைக்கிறது.யுனிவர்சல் பில்டர்ஸ் என்ற தனியார் நிறுவனம் ரூ.525 கோடி செலவில் பெங்களூருவில் குடியிருப்பு கட்டிடங்களை கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.