பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு ரூ.5,950 கோடியில் மெட்ரோ ரெயில் சேவை


பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு ரூ.5,950 கோடியில் மெட்ரோ ரெயில் சேவை
x
தினத்தந்தி 12 Dec 2017 12:00 AM GMT (Updated: 2017-12-12T03:41:38+05:30)

சர்வதேச விமானம் நிலையம் இடையே ரூ.5,950 கோடியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மந்திரிகள் மற்றும் தலைமை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் சிறப்பு விவசாய மண்டலம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும், அதிகளவில் தக்காளி உள்பட காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மண்டலம் அமைக்கப்படுகிறது. இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு கொள்கை வகுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கே.ஏ.எஸ். அதிகாரி அனிதா லட்சுமி உள்பட 4 ஊழியர்கள் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு லோக் அயுக்தா கூறியது. அதன்பேரில் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க தேவை இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.

கர்நாடக அரசில் 19 துறைகளில் 366 வகையான சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. பெங்களூரு ஒன், கர்நாடக ஒன், அடல் சேவை மையங்கள் என்று பல்வேறு மையங்கள் மூலம் இந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக ‘சேவா சிந்து‘ என்ற பெயரில் ஒரு சேவை மையத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக அரசின் 4-வது திட்டக் குழுவின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவு அடைகிறது. அதன் பதவி காலத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தில் வனப்பகுதியில் வசித்த மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க ரூ.20.79 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

பெங்களூருவில் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு உள்ளது. அந்த புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் மீது மேலும் 5 மாடிகளை கட்ட ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. விஜயாப்புரா மாவட்டத்தில் ரெயில் மேம்பாலம் ரூ.20.62 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கு மாநில அரசின் பங்குத்தொகையை ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கன்னட திரைப்பட பவன் ரூ.22.84 கோடியில் கட்டப்படுகிறது. பெங்களூரு தாசனபுரா ஒன்றியத்தில் குருபா சங்கம், ஒக்கலிகர் சங்கம் உள்பட 36 சாதி அமைப்புகள் கல்வி நிலையங்களை அமைக்கும் நோக்கத்திற்காக 78 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. பெங்களூருவில் ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்தை அமல்படுத்த சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது. பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி குழுவின் தலைவராக இருப்பார்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். சாகர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த ரூ.25.95 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. பல்லாரியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.87.14 கோடியில் செயல்படுத்தப்படும். பெங்களூருவில் 19 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதில் கழிவுநீராக வெளியேறும் நீரில் 10.56 டி.எம்.சி. நீரை மறுசுழற்சி செய்து பயன் படுத்த ஏதுவாக திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நீரை கொண்டு சிக்பள்ளாப்பூர், ஆனேக்கல், கோலார் ஆகிய பகுதிகளில் உள்ள 526 ஏரிகள் நிரப்பப்பட உள்ளது. இதே போல் மாநிலம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கழிநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த ஒரு கொள்கை வகுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 21 நகரங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு நிதி பற்றாக்குறையாக உள்ளது. எனவே வேறு அமைப்புகளிடம் இருந்து ரூ.350 கடன் பெற தீர்மானிக்கப்பட்டது. சிர்சி தாலுகாவில் 32 ஏரிகளை நிரப்பும் திட்டம் ரூ.62.58 கோடியில் அமல்படுத்தப்படுகிறது. ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகாவில் ரூ.79 கோடியில் 17 ஏரிகளில் நீர் நிரப்பப்படுகிறது.

தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய 3 மாவட்டங்களில் மழை காலத்தில் பெய்யும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதை தடுக்கும் விதமாக அந்த மாவட்டங்களில் ரூ.1,394 கோடியில் தடுப்பணைகளை கட்ட ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக தடுப்பணைகள் கட்ட ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்படும்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டிற்கு அதாவது 2018-19-ம் ஆண்டிற்கு 22.33 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.12 ஆயிரத்து 553 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. பெங்களூருவில் நாகவராவில் இருந்து சர்வதேச கெம்பேகவுடா விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.5,950 கோடி செலவில் அமல்படுத்தப்படுகிறது.

இதற்கு சர்வதேச விமான நிலையம் ரூ.1,000 கோடி, மாநில அரசு ரூ.1,250 கோடி. சரக்கு-சேவை வரி திட்டம் மூலம் ரூ.250 கோடி மற்றும் மத்திய அரசு சார்பாக ரூ.500 என மொத்தம் ரூ.3,000 கோடி திரட்டப்படும். மீதமுள்ள ரூ.2,950 கோடி கடன் பெறப்படும். 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாதை அமைக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு இந்த பணிகள் நிறைவு பெற்று மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும். இந்த பாதையில் 7 ரெயில் நிலையங்கள் அமைகின்றன. இந்த பாதையில் தினமும் 1¼ லட்சம் பேர் பயணம் செய்வார்கள்.

கர்நாடகத்தில் 418 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலையை மேம்படுத்த ரூ.5,334 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கொள்ளேகால்-ஹனூர், சிந்தாமணி-ஆந்திர எல்லை, மாகடி-சோமவார்பேட்டை ஆகிய சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. மகாமஸ்தகபிஷேகத்தை முன்னிட்டு ஹாசன் மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.36.80 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மைய வளாகத்தில் ரூ.88¼ கோடி செலவில் பாபு ஜெகஜீவன்ராம் ஆராய்ச்சி பவன் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. கர்நாடகத்தில் ஏரிகளில் தூர்வாரவும், அவற்றை மேம்படுத்தவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கர்நாடக அரசு துறையில் பணியாற்றும் ‘சிவில் சர்வீஸ்‘ அதிகாரிகளுக்கு வீடு கட்ட வழங்கப்படும் கடன் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நாளந்தா ஞான ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. பெங்களூரு மாநகராட்சியில் நடப்பு ஆண்டில் ரூ.2,191 கோடியில் திட்ட பணிகளை மேற்கொள்ள ஒரு செயல் திட்டம் வகுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.”
இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.

Next Story