‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான கடலூர், பரங்கிப்பேட்டை மீனவர்கள் 12 பேர் சொந்த ஊருக்கு வந்தனர்


‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான கடலூர், பரங்கிப்பேட்டை மீனவர்கள் 12 பேர் சொந்த ஊருக்கு வந்தனர்
x
தினத்தந்தி 12 Dec 2017 4:27 AM IST (Updated: 12 Dec 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான கடலூர், பரங்கிப்பேட்டை மீனவர்கள் 12 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். உயிருடன் கரைக்கு திரும்பியது மறுபிறவி எடுத்தது போல் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமிநகரில் இருந்து அருள்செல்வம் (வயது 37), முருகன் (35), அசோக் (30), மலர்வண்ணன் (36), மூர்த்தி (38) ஆகிய 5 பேர் மற்றும் பூம்புகார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் கொச்சியில் இருந்து 750 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, திடீரென ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமாகி விட்டனர். ராட்சத அலையில் சிக்கிய அவர்கள் கடந்த 7 நாட்களாக கடலில் பல்வேறு இடங்களுக்கு சென்று தத்தளித்தபடி இறுதியில் கொச்சியை வந்தடைந்தனர். அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு வந்தனர். அதன்படி, தேவனாம்பட்டினம் மீனவர்கள் 5 பேரும் சொந்த ஊருக்கு வந்தனர். அவர்களை கண்டதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றனர்.

ஊருக்கு திரும்பிய அருள்செல்வம், முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 30-ந்தேதி கொச்சியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றோம். மீன்பிடித்து விட்டு திரும்பி வந்த போது ‘ஒகி’ புயலில் சிக்கி விட்டோம். அப்போது கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த சில மீனவர்கள் கரைக்கு திரும்பாமல் வேறு வழியாக செல்லுமாறு கூறினர். இதனால் நாங்கள் 13 பேர் விசைப்படகில் மராட்டிய மாநிலம், கோவா, மாலத்தீவு என பல்வேறு இடங்களுக்கு சென்று, மீண்டும் கொச்சியை வந்தடைந்தோம். நடுக்கடலில் அலையின் சீற்றத்தை பார்த்தபோது உயிருடன் திரும்பி வர மாட்டோம் என்று நினைத்தோம். தற்போது உயிருடன் கரைக்கு திரும்பியது மறுபிறவி எடுத்தது போல் உள்ளது. நாங்கள் 13 பேரும் பாதுகாப்புடன் வந்து விட்டோம் என்றனர்.
இதேபோல் ‘ஒகி’ புயலால் லட்சத்தீவில் சிக்கி தவித்த கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமிநகரை சேர்ந்த வேலு, மண்ணாங்கட்டி, துரைராஜ் ஆகிய 3 மீனவர்களும் நேற்று மதியம் ஊருக்கு திரும்பி வந்தனர்.

இவர்களை தவிர பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் வடக்கு, சின்னூர் தெற்கு, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் தங்கி இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் கடந்த 28-ந்தேதி ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது வீசிய ‘ஒகி’ புயலில் சிக்கி அவர்கள் மாயமானார்கள். இந்நிலையில் மாயமான மீனவர்களில் சிலர் பாதுகாப்பாக தீவுகளில் கரை ஒதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதற்கிடையில் ‘ஒகி’ புயலில் சிக்கிய மீனவர்களில் ராமையன் (52), மதியழகன்(39), காமராஜ்(36), குமார்(52) ஆகிய 4 பேரும் கரைக்கு வந்து, தங்கள் சொந்த ஊரான பரங்கிப்பேட்டைக்கு நேற்று முன்தினம் வந்தடைந்தனர். அவர்களுடன் மீன்பிடிக்க சென்ற செல்லதுரை, ராஜா, ரகுபதி, தட்சணாமூர்த்தி ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதே ஊரை சேர்ந்த ராமையா(50), சங்கர்(48), கோவிந்தராஜ்(37) ஆகிய 3 பேர் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரியவில்லை என்றனர்.

இதையடுத்து ராமையன், மதியழகன், காமராஜ் ஆகிய 3 பேரும் ‘ஒகி’ புயலில் சிக்கி உயிர் தப்பி வந்தது பற்றி கூறுகையில், ‘ஒகி’ புயலில் சிக்கிய நாங்கள் 2 நாட்கள் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தோம். உயிருடன் கரைக்கு திரும்புவோம் என்று நினைக்கவே இல்லை. காற்று பலமாக வீசியது. அப்போது எங்கள் கண் எதிரே சில படகுகள் கடலில் மூழ்குவதை பார்த்து அச்சமடைந்தோம். பின்னர் கர்நாடக மாநிலம் மலப்பை என்ற இடத்தில் கரைக்கு திரும்பினோம்.

பின்னர் புயல் சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் கடல் வழியாக கன்னியாகுமரிக்கு திரும்ப முயன்றோம். ஆனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் படகை தொடர்ந்து இயக்க முடியாமல் கேரள மாநிலம் மொனப்பம் என்ற இடத்தில் படகை நிறுத்தினோம்.

இதையடுத்து அங்கு எங்களுக்கு தெரிந்த நபர்களிடம் ஒவ்வொருவரும் ரூ.500 கடன் வாங்கிக்கொண்டு பஸ்சில் சொந்த ஊருக்கு வந்தோம் என்றனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் கடலூர் மாவட்ட மீனவர்கள் 12 பேர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story