‘வார்தா’ புயலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத வண்டலூர் பூங்கா


‘வார்தா’ புயலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத வண்டலூர் பூங்கா
x
தினத்தந்தி 11 Dec 2017 11:29 PM GMT (Updated: 11 Dec 2017 11:29 PM GMT)

வார்தா புயல் ஏற்பட்டு ஒரு ஆண்டாகியும் அதன் பாதிப்பில் இருந்து வண்டலூர் பூங்கா மீள முடியாமல் தவித்து வருகிறது.

வண்டலூர்,

மரங்கள் சாய்ந்து பொலிவை இழந்ததால் அங்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி வீசிய வார்தா புயலால் வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகள் இருப்பிடங்கள், பார்வையாளர்கள் நடந்து செல்லும் சாலை பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பூங்காவில் விலங்குகளின் கூண்டுகள், கட்டிடங்கள் என அனைத்தும் வரலாறு காணாத அளவுக்கு சேதம் அடைந்து பூங்கா முழுவதும் சின்னாபின்னமானது.

இதனையடுத்து அன்றையதினம் மூடப்பட்ட பூங்காவில் போர்க்கால அடிப்படையில் சிறிய அளவில் சீரமைப்பு பணிகளை செய்த பிறகு சுமார் 60 நாட்கள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி மீண்டும் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்காக பூங்கா திறக்கப்பட்டது.

‘வார்தா’ புயலுக்கு பிறகு பூங்கா சீரமைக்கப்பட்டாலும் அங்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் புயலின் போது 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பூங்கா பொலிவை இழந்து வெயிலின் தாக்கம் அதிமாக காணப்படுவதால் குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் பூங்காவுக்கு வருவதை தவிர்த்து விடுகின்றனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபாதை சீரமைப்பு மற்றும் மரங்களை வெட்டுதல், விலங்குகளின் கூண்டினை சீரமைத்தல், இரும்பு வேலிகள் அமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த ஆண்டு சேதம் அடைந்த பறவைகளின் கூண்டு உள்பட பல இடங்கள் இன்னும் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இதே போல சிறுவர்கள் விளையாடும் பூங்காவிலும் சரியான முறையில் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை புயலில் விழுந்த மரங்களுக்கு மாற்றாக புதிதாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வார்தா புயலில் ஏற்பட்ட வரலாறு காணாத சேதங்களில் இருந்து பூங்கா இன்னும் மீளவில்லை, தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடக்கிறது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேரோடு சாய்ந்த மரங்களுக்கு மாற்றாக புதிதாக 10 வகையான 20 ஆயிரம் மரக்கன்றுகள் நர்சரி மூலம் உருவாக்கப்பட்டு, இதில் தற்போது வரை 3 ஆயிரம் மரக்கன்றுகள் பூங்காவில் நடப்பட்டு, அதற்கு இரும்பு கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

44 விலங்குகளின் இரும்பு கூண்டில் ஏற்பட்ட பாதிப்புகள், அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள இரும்பு வேலிகளை சீரமைத்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. கடந்த ஆண்டை விட பூங்காவுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிகை குறைந்துள்ளது. ஆனால் பூங்காவில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் வருவாய் அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு (2018) பொங்கல் பண்டிகைக்குள் பூங்காவில் புயல் பாதித்த அனைத்து இடங்கள் மற்றும் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்கா சீரமைப்பு பணிகளும் முழுமையாக முடிந்துவிடும்.
இவ்வாறு பூங்கா அதிகாரி கூறினார்.

பூங்காவில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை முழுமையாக முடித்து அதனை பழைய பொலிவுடன் உருவாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story