தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 27). இவரது நண்பர் விக்கி(17). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை திம்மாவரம் அருகே உள்ள ஆற்றங்கரையோரம் மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீடு திரும்பினர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் செங்கல்பட்டு– காஞ்சீபுரம் தேசிய நெடுஞ்சாலை திம்மாவரம் பகுதியில் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் உடல் நசுங்கி முருகன், விக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் தேசில் தாலுகாவை சேர்ந்தவர் ராஜேஷ் சர்கிராம் (29). இவர் களியாம்பூண்டியில் தங்கியிருந்து உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் மோட்டார்சைக்கிளில் உத்திரமேரூரில் இருந்து களியாம்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தார். களியாம்பூண்டி குழந்தைகள் காப்பகம் அருகில் சென்றபோது வேகத்தடையில் மோதி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் சர்கிராமை உடனடியாக பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.