திருவள்ளூர் தாலுகா அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் முற்றுகை போராட்டம் .
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ராமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட தோமூர் காலனியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் அதே பகுதியில் சுமார் 1½ ஏக்கர் நிலத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். அதற்கான ரசீதுகளையும் சான்றுகளையும் வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் சம்பவ இடத்திற்கு செனறு அங்கு 1½ ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலையை டிராக்டர் மூலம் உழுதுவிட்டனர். இது குறித்து கேட்டபோது அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் அருகாமையில் உள்ள நிலஙங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தை கையில் கோரிக்கை மனுக்களுடன் முற்றுகையிட்டு கண்டன கோஷகங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் பயிர் செய்ய அனுமதி வழங்குமாறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் பொதுமக்கள் இது தொடர்பான புகார் மனுவை தாசில்தார் தமிழ்ச்செல்வனிடம் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.