நீதிபதி வீட்டில் சமைத்த போது பருப்பு குழைந்ததால் ஆத்திரம் பெண் உதவியாளருக்கு தோசை கரண்டியால் சூடு


நீதிபதி வீட்டில் சமைத்த போது பருப்பு குழைந்ததால் ஆத்திரம் பெண் உதவியாளருக்கு தோசை கரண்டியால் சூடு
x
தினத்தந்தி 13 Dec 2017 4:45 AM IST (Updated: 13 Dec 2017 4:38 AM IST)
t-max-icont-min-icon

நீதிபதி வீட்டில் சமையல் செய்த போது பருப்பு குழைந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெண் உதவியாளருக்கு தோசை கரண்டியால் சூடு போட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி அருகே உள்ள பெட்டவாத்தலையை சேர்ந்தவர் நிர்மலா (வயது 25). இவர் திருச்சி கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அலுவலக உதவியாளரான இவரை ஒரு பெண் நீதிபதியின் வீட்டில் சமையல் வேலைக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி வீட்டில் நிர்மலா சமையல் வேலை செய்து கொண்டிருந்த போது அடுப்பில் வேக வைத்த பருப்பு குழைந்து போய்விட்டதாம். இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதியின் தாயார் அடுப்பு தீயில் காயவைத்த தோசை கரண்டியால் நிர்மலாவின் தோள் பட்டையில் சூடு வைத்தாராம். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

தோள்பட்டையில் சூடு வைக்கப்பட்டதால் காயம் அடைந்த நிர்மலா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சக ஊழியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தார். இது கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் நிர்மலா மீது சூடு வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி கோர்ட்டு வாசல் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு நீதித்துறை அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட துணை தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் கருணாகரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் லட்சுமணன், இணை செயலாளர் மாணிக்கம், வட்ட செயலாளர் பால்பாண்டி, நீதித்துறை ஊழியர் சங்க இணை செயலாளர் ஆரோக்கியராஜ் உள்பட நிர்வாகிகள் பேசினார்கள். இதில் நீதிமன்ற ஊழியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி குமரகுருவை சந்தித்து நிர்மலாவுக்கு சூடு போட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு புகார் மனு கொடுத்தனர். 

Next Story