சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 5:21 AM IST (Updated: 13 Dec 2017 5:21 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

1.1.2017 முதல் 3-வது ஊதிய மாற்றம் அமல்படுத்த வேண்டும், 2-வது ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும், துணை டவர் நிறுவனம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் நேற்று முதல் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சேலத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அந்த அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டது. இதனால் டெலிபோன் கட்டணம், போஸ்ட் பெய்டு, பிரீபெய்டு கட்ட வந்த வாடிக்கையாளர்கள், புதிய சிம்கார்டு மற்றும் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வந்தவர்கள் என அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆர்ப்பாட்டம்

சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள கோட்ட பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பி.எஸ்.என்.எல். எம்ப்ளாய்ஸ் யூனியன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோபால், அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மனோகரன் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story