வீட்டுக்கு எடுத்து செல்ல பாதை இல்லாததால் மாணவரின் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டம்


வீட்டுக்கு எடுத்து செல்ல பாதை இல்லாததால் மாணவரின் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2017 11:52 PM GMT (Updated: 12 Dec 2017 11:52 PM GMT)

வீட்டுக்கு எடுத்து செல்ல பாதை இல்லாததால், மாணவரின் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகே சின்னுலுப்பை ஊராட்சி செல்லப்பட்டநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொம்மன். விவசாயி. அவ ருடைய மகன் லோகேஸ்வரன் (வயது 14). இவர், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில மாதங் களாக புற்றுநோயால் அவதிப்பட்ட இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

பொம்மனின் வீடு, செல்லப்பட்டநாயக்கன்பட்டி கிழக்கு தோட்டத்தில் உள்ளது. அவருடைய வீட்டுக்கு தனியார் நிலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த தனியார் நில உரிமையாளருக்கும், பொம்மன் குடும்பத்தினருக் கும் இடையே கோவில் திருவிழா நடத்துவதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவருடைய வீட்டுக்கு செல்லும் பாதையில் முள்வேலியால் அடைத்து விட்டனர். இதனால் தற்போது அங்கு செல்ல பாதை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

உடலை வைத்து போராட்டம்

இந்தநிலையில் லோகேஸ்வரனின் உடலை வீட்டுக்கு எடுத்து செல்ல வழியில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள், லோகேஸ்வரன் உடலை திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடலை கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக முள்வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

அதன்பின்னர் வேலி அகற்றப்பட்டு வீட்டுக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். பின்னர் அவரின் உடல் இறுதி அடக்கம் செய்யப்பட்டது. போராட்டம் காரணமாக, அந்த சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. 

Next Story