ஒகி புயலில் சிக்கிய புதுச்சேரி மீனவர்கள் 22 பேர் மீட்பு


ஒகி புயலில் சிக்கிய புதுச்சேரி மீனவர்கள் 22 பேர் மீட்பு
x
தினத்தந்தி 13 Dec 2017 5:41 AM IST (Updated: 13 Dec 2017 5:41 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் சிக்கிய புதுவை மீனவர்கள் 22 பேர் மீட்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை நரம்பை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கந்த நாதன், அருள்ராஜ், ஆறு முகம், ஆனந்த், மணிகண்ட பிரபு ஆகியோர் கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் ஒகி புயலில் சிக்கினார்கள்.

இதனால் இழுத்து செல்லப்பட்ட அவர்களது படகு லட்சத்தீவில் கரை ஒதுங்கியது. இதைத்தொடர்ந்து பத்திரமாக மீட்கப்பட்ட அவர்கள் புதுவைக்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களை நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணராவ், கந்தசாமி ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

மீனவர்களிடம் உடல்நலம் விசாரித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை குருசுக்குப்பம், நல்லவாடு, பகுதியை சேர்ந்த மீனவர்களும் குஜராத் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்களும் ஒகி புயலில் சிக்கி அங்குள்ள துறைமுகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோல் கர்நாடக மாநிலம் மாண்டே பகுதியிலும் புதுவை மீனவர்கள் கரை ஒதுங்கியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை புதுவைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புயலில் சிக்கி பாதிப்படைந்த மீனவர்கள், அவர்களது படகுகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தலைமையில் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும். மீனவர்களை பத்திரமாக அழைத்துவர அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story