ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தமிழக ஆட்சி மாற்றத்திற்கான அச்சாரமாக அமையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேட்டி
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தமிழக ஆட்சி மாற்றத்திற்கான அச்சாரமாக அமையும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மைதீன் பேட்டி அளித்தார்.
ராமநாதபுரம்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்தியா முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். வருகிற 17–ந்தேதி பெங்களூருவில் முஸ்லிம் மாணவர் பேரவையின் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதேபோல இளைஞர் லீக் தொழிலாளர் யூனியன் ஆகியவற்றையும் உருவாக்கி நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சிறுபான்மை வாழ்வுரிமை கோரிக்கை மாநாடுகளை நடத்தி வருகிறோம். வருகிற பிப்ரவரி மாதம் 3–ந்தேதி ராமநாதபுரத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் தி.மு.க. துணை பொது செயலாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் விதிமுறைகளை ஆளும் கட்சியினர் மீறி வருகின்றனர். இதேநிலை நீடித்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். தேர்தல் அதிகாரியை மாற்றுவதற்கு முன்பே பணப்பட்டுவாடா நடந்து விட்டது. இருப்பினும் அங்கு ஆளும்கட்சியை மீறி தி.மு.க. வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது. தமிழக ஆட்சி வெறும் காட்சியாக உள்ளது. மக்களிடம் இந்த ஆட்சியை பற்றி குமுறல், கொந்தளிப்பு உள்ளது. செயல்படாத அரசாக உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தமிழக ஆட்சி மாற்றத்திற்கான அச்சாரமாக அமையும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் திராவிட பாரம்பரியம் சமூகநீதி நிலைக்க தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். இதேபோல தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும். பா.ஜ.க.விற்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர்ந்தால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தியை வாழ்த்தி வரவேற்கிறேன்.
குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு மண்டல்கமிஷனின் 27 சதவீத இட ஒதுக்கீட்டு கொள்கையையே புறந்தள்ளிவிட்டு இடஒதுக்கீடுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசின் குரூப்–1 பணிக்கான தேர்வில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் ஒருவர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டை கூட மத்திய அரசு மறுத்து வருகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதார சீரழிவு மட்டுமின்றி பேரழிவு ஏற்பட்டு வருகிறது.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு முத்தலாக் விவகாரத்தில் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கக்கூடிய சட்ட வரைவு மசோதாவை தாயாரித்துள்ளது. இதனை உத்தரபிரதேச அரசு மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளது. பல மாநில அரசுகள் அதனை ஆதரிக்கவில்லை. தமிழக அரசும் அதனை ஆதரிக்க கூடாது. முஸ்லிம் ஷரியத் சட்டத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அந்த கோரிக்கை முஸ்லிம்கள் தரப்பில் இருந்து வரவேண்டும். அரசாங்கம் அதனை தானாக செய்யக்கூடாது. இடஒதுக்கீடு கொள்கையில் முழுஅதிகாரத்தையும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கட்சியின் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசை முகமது, செயலாளர் முகமது பைசல், துணை தலைவர் சாதுல்லாகான், பரக்கத் அலி, நகர் தலைவர் கதியத்துல்லா, துணை செயலாளர் யாகூப் ஆகியோர் உடன் இருந்தனர்.