“மக்கள் நலன் கருதியே தமிழக அரசு புதிய மணல் குவாரிகளை தொடங்க முடிவு செய்துள்ளது” மதுரை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் வாதம்


“மக்கள் நலன் கருதியே தமிழக அரசு புதிய மணல் குவாரிகளை தொடங்க முடிவு செய்துள்ளது” மதுரை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் வாதம்
x
தினத்தந்தி 13 Dec 2017 10:30 PM GMT (Updated: 13 Dec 2017 6:46 PM GMT)

“மக்கள் நலன் கருதியே தமிழக அரசு புதிய மணல் குவாரிகளை தொடங்க முடிவு செய்துள்ளது“ என்று, மதுரை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமையா என்பவருக்கு சொந்தமான எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை முறையாக செலுத்தியும், தமிழக அரசு விடுவிக்க மறுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், “எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும்“ என்று கடந்த மாதம் 29–ந்தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அதில், ‘வெளிநாட்டு மணலை விற்கவும், வெளியே எடுத்துச் செல்லவும் அனுமதி கோரியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுதாரர் கோரிக்கை விடுக்காத நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூடுவதற்கும் உத்தரவிட்டு, புதிதாக மணல் குவாரிகளை திறக்கவும் தடை விதித்துள்ளார். இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அரசிடம் கருத்து கேட்கப்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், இறக்குமதி மணலில், 42,051 டன் மணலை ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜான் மர ஆலை நிறுவன இயக்குனர் மரியஆண்டனியும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி வாதாடியதாவது:–

“தமிழகத்தில் தற்போது மணல் விற்பனை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. மேலும் அதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மணலாக இருந்தாலும் மாநில விதிகளுக்கு உட்பட வேண்டும்.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ள மணலில் சிலிக்கா கலந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த மணலில் சிலிக்கா கலந்து இருக்கும்பட்சத்தில் கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தினால் கட்டிடங்கள் பாதிக்கப்படும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டதால் தான் அந்த கட்டிடம் இடிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் மக்களின் நலன்கருதி தான் புதிய மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு மணல் குவாரிகளை திறக்கக்கூடாது என்ற தனிநீதிபதியின் உத்தரவு தடையாக உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல போக்குவரத்து லைசென்சு பெறுவது அவசியம். இந்த நடைமுறை கேரள மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இறக்குமதி சட்டத்தில் சில புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும். எனவே மணல் குவாரிகளுக்கு எதிரான தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அட்வகேட் ஜெனரல் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, மணல் லாரி உரிமையாளர்கள் சார்பாகவும் தங்கள் லாரிகளை விடுவிக்கக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.சுஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்திருந்த மணல், கடந்த அக்டோபர் மாதம் 22–ந்தேதி மார்த்தாண்டத்துக்கு எங்கள் லாரி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்கள் லாரியை வழிமறித்து சோதனை செய்தார்.

அவரிடம் உரிய ஆவணங்களை லாரி டிரைவர் காண்பித்துள்ளார். ஆனால் இறக்குமதி செய்த மணலை லைசென்சு பெறாமல் கொண்டு செல்வதாக வழக்குபதிவு செய்து, லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். கனிமவள சட்டத்தின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்வதற்கு அதிகாரம் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட எங்கள் லாரியை நாகர்கோவில் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தொடர்ச்சியாக ஒரே இடத்தில் 30 நாட்களுக்கும் மேலாக லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சேதமடைந்து வருகிறது. எனவே லாரியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், கனிமவளத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. எனவே எங்களது லாரியை விடுவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல மேலும் 5 லாரிகளின் உரிமையாளர்களான கன்னியாகுமரியை சேர்ந்த காமராஜ், ஏசுமரியன், ஜெகன்லால், ராஜேஷ் ஆகியோரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

முடிவில், “மனுதாரர்கள் தலா ரூ.25 ஆயிரத்தை வைப்புத்தொகையாக கனிமவள உதவி இயக்குனரிடம் செலுத்த வேண்டும். அதன்பின் அவர்கள் தங்கள் லாரிகளில் உள்ள மணலை அதிகாரிகள் கூறும் இடத்தில் வைக்க வேண்டும். மனுதாரர்களுக்கு சொந்தமான லாரிகளை 7 நாட்களுக்குள் அதிகாரிகள் விடுவிக்க வேண்டும்“ என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story