விருதுநகர் மக்களை பரிதவிக்கவிட்ட குடிநீர் வடிகால் வாரியம் 10 ஆண்டுகள் ஆகியும் பணி முடியாத நிலை


விருதுநகர் மக்களை பரிதவிக்கவிட்ட குடிநீர் வடிகால் வாரியம் 10 ஆண்டுகள் ஆகியும் பணி முடியாத நிலை
x
தினத்தந்தி 14 Dec 2017 3:15 AM IST (Updated: 14 Dec 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியும் திட்டப்பணி முடியாத நிலையில் விருதுநகர் நகர் மக்களை பரிதவிப்புக்குள்ளாக்கிய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர்.

விருதுநகர்,

தமிழகத்தில் முதன் முதலாக நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை அமல்படுத்த தேர்வு செய்யப்பட்ட நகராட்சிகளில் விருதுநகர் நகராட்சியும் ஒன்றாகும். கடந்த 2007–ம் ஆண்டு ரூ.23 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பங்களிப்புடன் இத்திட்டப்பணி தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குள் பணி முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. திட்டப்பணியை குடிநீர் வடிகால் வாரியமும், நிதிசெலவை நகராட்சி நிர்வாகமும் ஏற்றுக்கொண்டன.

திட்டப்பணி தொடங்கியதில் இருந்தே குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாததால் நகரின் மேற்கு பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நகரின் கிழக்கு பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்னரே 90 சதவீத திட்டப்பணிகள் முடிந்து விட்ட நிலையில் நகரின் மேற்கு பகுதியில் 70 சதவீத பணிகளே முடிவடைந்த நிலையில் பணியை செய்த ஒப்பந்ததாரர் பணியை செய்ய முடியாமல் விலகி கொண்டார். பின்னர் ரூ.3¼ கோடிக்கான திட்டப்பணிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மறு டெண்டர் விடப்பட்டு ஓராண்டுக்குள் பணி முடிக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் திட்டப்பணிகள் முடிவடையாமல் உள்ளன.

நகரின் உள்தெரு, 21,24 வார்டுகளில் உள்ள பல பகுதிகளில் பாதாள சாக்கடைக்கான குழாய்களே பதிக்கப்படாத நிலையில் ரெயில்வே பீடர் ரோடு போன்ற பகுதிகளில் வீடுகளுக்கான இணைப்பு கொடுப்படவே இல்லை. இது தவிர இத்திட்டப்பணிக்கான வரைபடத்தில் பல பகுதிகள் விடுபட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் பாதாள சாக்கடைக்கான பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நகரில் தினசரி ஏதாவது ஒரு பகுதியில் ஆள் இறங்கும் குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுவதும், வீடுகளுக்குள் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாத நிலையில் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தான் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருந்துவருகிறது. மொத்தத்தில் திட்டப்பணிக்கு பொறுப்பான குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடை திட்டத்தால் விருதுநகர் மக்களை பரிதவிக்க விட்டுவிட்டு பாராமுகமாகவே உள்ளது.

திட்டப்பணிகள் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முழுமையாக முடிக்காமல் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திட்டப்பராமரிப்பினை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். நகராட்சி நிர்வாகமோ திட்டப்பணியை மேற்கொண்டதில் 20–க்கும் மேற்பட்ட குறைபாடுகள் இருப்பதாகவும், திட்டப்பணிகள் முழுமையாக முடிவடையாமல் இருப்பதாக கூறி பராமரிப்பை ஏற்க மறுத்துவிட்டது. அதன் பின்னரும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திட்டபணியை முழுமையாக முடிக்க உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இதே நிலை நீடித்தால் விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக பயன்பட்டிற்கு வர எவ்வளவு வருடங்கள் ஆகும் என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து குடிநீர்வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த நிதியாண்டிற்குள் திட்டப்பணியை முழுமையாக முடித்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் பாதாள சாக்கடை திட்டத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நகரில் நோய் தொற்று ஏற்படும் என்பது உண்மை.


Next Story