தொடர் மணல் திருட்டால் வைகை ஆற்றில் தண்ணீர் வந்தும் பலனில்லாமல் போனது விவசாயிகள் புலம்பல்
ராஜகம்பீரம் பகுதியில் தொடர் மணல் திருட்டால் வைகை ஆற்றில் நீர்வரத்து இருந்தும் நிலத்தடி நீர் மட்டம் உயராததுடன், தண்ணீரும் இப்பகுதியில் வரவில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.
மானாமதுரை,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக கடந்த 5–ந்தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்ட கிணறுகள், ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள கிணறுகள், விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்தது. வைகை ஆற்றில் பரவலாக தண்ணீர் சென்றால் வைகை ஆற்றின் இரு கரைகளை ஒட்டியுள்ள விவசாய கிணறுகள் பயன்பெற வாய்ப்புண்டு. மற்ற பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டு வந்த தண்ணீர் ராஜகம்பீரம் பகுதியில் வந்த உடன் தென்பகுதியை ஒட்டியே சென்றதால் வடபகுதியில் உள்ள கரிசல்குளம், ஆலங்குளம், கல்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்தே இல்லை. இதனால் இந்த கிராம விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. மேலும் கல்குறிச்சி ஊராட்சிக்கு செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்ட கிணறுகளிலும் ஊற்றுகண் திறக்கவில்லை.
கல்குறிச்சி, கரிசல்குளம் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி பலரும் நெல் நடவு செய்துள்ளனர். தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டதால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து நெற்பயிர்களை காப்பாற்றிவிடலாம் என்று விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் தண்ணீர் ஒரே புறமாக சென்றதால் விவசாயம் செய்யமுடியாமல் புலம்பி வருகின்றனர். தரையை நனைக்க கூட தண்ணீர் இப்பகுதியில் வரவில்லை. விவசாயிகள் தரப்பில் கூறுகையில், தொடர் மணல் திருட்டு காரணமாக வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒரே புறமாக சென்று விட்டது. தென்புறமாக மட்டும் சென்றதால் ராஜகம்பீரம், கால்பிரவு உள்ளிட்ட பகுதிகள்தான் பயன்பெற்றன. எங்கள் பகுதியில் தண்ணீர் சிறிதளவு கூட வரவில்லை. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது என்றனர்.