காரைக்குடியில் திருமாவளவனை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
இந்து கோவில்கள் குறித்து பேசிய திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா சார்பில் காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் இந்து கோவில்கள் பற்றிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மணிசங்கர் அய்யரை கண்டித்தும் காரைக்குடியில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா முன்னிலை வகித்தார். நகர தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– திருமாவளவனின் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தும்படியும், ஆத்திரமடைய செய்யும் வகையிலும் உள்ளது. மேலும் அவர் சாதி, மத இன மோதலை தூண்டும் வகையில் செயல்படுகிறார். இதனை பா.ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. திருமாவளவனை அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும்.
மணிசங்கர் அய்யரின் பிரதமர் மோடி பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. நாட்டின் ஒற்றுமையினை காப்பதிலும், மக்களுக்கு சேவையாற்றுவதிலும் பா.ஜனதா மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. குமரி மாவட்டம் முழுவதும் புயலால் பாதிக்கப்பட்டபோது முதல் ஆளாக சென்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் களப்பணியாற்றினார். அவரை தொடர்ந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மீட்பு நடவடிக்கை எடுத்து மீனவர்களுக்கு உதவினார். இந்த பிரச்சினையில் மத்திய அரசை விமர்சனம் செய்வோர் யாருமே களத்திற்கு செல்லவில்லை. காரைக்குடி நகராட்சி கடைகளின் வாடகையை பல மடங்கு உயர்த்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் விஸ்வநாத கோபாலன், இலுப்பக்குடி நாராயணன், செயற்குழு உறுப்பினர் பாலரவிராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.