பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2017 3:15 AM IST (Updated: 14 Dec 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஆல்துரை தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாக்கியம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாக்கியம் கூறியதாவது:–

மத்திய அரசு தொழிலாளர்கள் நல சட்டத்தை திருத்தம் செய்யக்கூடாது. இந்த சட்டம் திருத்தத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கக்கூடாது. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ், டர்னீப் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சில்லறை விற்பனை கடைகளில் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.

ஆனால், மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் மிகவும் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படுகிறது. எனவே, மாநில அரசு அதிகாரிகள் தலையிட்டு விளைபொருட்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, மலை மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story