ஆந்திர தீவு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு படிப்பதற்காக படகில் வரும் 52 மாணவர்களுக்கு உயிர் பாதுகாப்பு கவசம்
ஆந்திர மாநில தீவு பகுதிகளில் இருந்து தமிழக அரசு பள்ளிகளுக்கு படகில் வந்து படிக்கும் மாணவர்கள் 52 பேருக்கு உயிர் பாதுகாப்பு கவசத்தை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி,
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளி மையத்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கம், வடகோடி என்ற 2 தீவு கிராமங்கள் உள்ளன. பழவேற்காடு ஏரியின் மத்தியில் இந்த பகுதிகள் உள்ளன. இது ஆந்திர மாநிலப்பகுதி என்றாலும், இங்கு வசிப்பவர்களின் தாய் மொழி தமிழ்தான்.
இந்த கிராமங்களில் உள்ள 100–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள், அங்கிருந்து 1½ மணி நேர ஆபத்தான படகு சவாரி மூலம் தமிழகத்தின் சுண்ணாம்புகுளம் மற்றும் ஓபசமுத்திரம் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த மாணவர்களின் நலன் கருதி அவர்கள், படகு சவாரியின் போது அணிந்து கொள்வதற்கான உயிர் பாதுகாப்பு கவசம் (லைப் ஜாக்கெட்) வழங்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதைத்தொடர்ந்து ஓபசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உயிர் பாதுகாப்பு கவசம் வழங்கும் விழா நேற்று மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் குமார், பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் நாகலட்சுமி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில், முதற்கட்டமாக 52 மாணவ–மாணவிகளுக்கு உயிர் பாதுகாப்பு கவசங்களை கலெக்டர் சுந்தரவல்லி வழங்கி பேசினார். இதில், வருவாய் ஆய்வாளர் பாலாஜி, உதவி தொடக்க கல்வி அலுவலர் முனிசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.