குடிநீர் குழாயில் பாம்பு வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


குடிநீர் குழாயில் பாம்பு வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 14 Dec 2017 4:15 AM IST (Updated: 14 Dec 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு அருகே குடிநீர் பிடித்தபோது குழாயில் பாம்பு வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த நீர்முளை மாதாக்கோவில் அருகே 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூலம் நீர்முளை கிராமத்திற்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த 500 குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடித்தபோது சிறிய பாம்பு ஒன்று குடிநீர் குழாயில் இருந்து விழுந்தது. இதனால் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. அதைதொடர்ந்து இதனை கண்டித்து நீர்முளை கிராம முக்கியஸ்தர் சேவியர் தலைமையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் கிராம பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராசு, குமரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நீர்முளை மாதாக்கோவில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் தற்போது குடிநீர் குழாயில் பாம்பு வந்துள்ளது. எனவே இந்த குடிநீரை பருகினால் ஏதேனும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், இந்த தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து சரியான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, அதிகாரிகள், பணியாளர்களை கொண்டு தொட்டியில் உள்ள தண்ணீரை அகற்றி சுத்தம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story