ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதம் அடைந்த குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை கலெக்டர் உத்தரவு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதம் அடைந்த குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 Dec 2017 4:15 AM IST (Updated: 15 Dec 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

பாப்பம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார்.

நெய்க்காரப்பட்டி,

பழனி தாலுகா ஆண்டிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள குதிரையாறு அணையில் இருந்து பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று பழனிக்கு வந்த கலெக்டர் டி.ஜி.வினய் பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சப்- கலெக்டர் அருண்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் இருந்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பல் மருத்துவ பிரிவு, ஆய்வகம், ரத்த சேமிப்பு அறை, குழந்தைகள், கர்ப்பிணிகள் வார்டு, பிரசவ வார்டு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல் மருத்துவ பிரிவில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டிகளை கலெக்டர் ஆய்வு செய்த போது, குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேமிக்கும் பிளாஸ்டிக்காலான பாத்திரத்தில் மாசடைந்த நிலையில் தண்ணீர் இருப்பது தெரியவந்தது.

உடனே அந்த பாத்திரத்தை சுத்தப்படுத்தும்படி ஆரம்ப சுகாதார பணியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் மாசடைந்த நிலையில் உள்ள தண்ணீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் அவர்களை எச்சரித்தார். பின்னர் கர்ப்பிணிகள் வார்டுக்கு அவர் சென்ற போது, உள்நோயாளிகள் யாரும் அங்கு இல்லை.

இது குறித்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் அவர் கேட்ட போது, சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளில் பலருக்கு பிரசவ நேரத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே அவர்கள் அனைவரும் பழனி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்படுகின்றனர். இதனால் இங்கு உள்நோயாளிகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் இருப்பதை கலெக்டர் கவனித்தார். உடனே அனைத்து குடியிருப்புகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அதையடுத்து சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சுகாதாரத்துறை நலப்பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், வட்டார மருத்துவ அலுவலர் வசந்தா ஆகியோரிடம் கலெக்டர் கேட்டார்.

இதற்கு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மொத்தம் 16 குடியிருப்புகள் உள்ளன. இவை தொடக்கத்தில் குடும்ப கட்டுப்பாடு பயிற்சி மையமாக செயல்பட்டு பின்னர் பணியாளர்கள் குடியிருப்பாக மாறியது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கிடையே முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்கள் பாழடைந்தன. இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை என்று அவர்கள் கூறினர். பின்னர் பேசிய கலெக்டர் கட்டிடங்களை விரைவில் சீரமைக்க பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

Next Story