கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2017 4:15 AM IST (Updated: 15 Dec 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்.

கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ. வசதி செய்து தர வேண்டும். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆற்று மணல் கொண்டு செல்ல கூடாது. கட்டிட தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. வசதி செய்து தர வேண்டும்.

தூத்துக்குடி தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் மற்றும் கல்வி உதவித்தொகை 2½ ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை. எனவே அவற்றை உடனே வழங்க வேண்டும்.

கேரள மாநிலத்தைப் போன்று 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்க கூடாது. போலி மதுபானம் விற்பதை தடை செய்ய வேண்டும். கோவில்பட்டி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் தொழிலாளர்களை அதிகமாக சேர்க்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை குறைந்த சம்பளத்துக்கு சேர்த்து விட்டு, உள்ளூர் தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், தொ.மு.ச. தலைவர் பரமசிவம், பொன் இருளாண்டி, ஐ.என்.டி.யு.சி. மாநில செயல் தலைவர் கதிர்வேல், எம்.எல்.எப். தலைவர் குழந்தைவேல், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் பொன்ராஜ், எப்.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சங்கரன், கட்டிட தொழிலாளர் சங்க மாநில தலைவர் செண்பகசுப்பு மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story