பனியன் நிறுவன வேன்கள் மோதல்; பெண் பலி


பனியன் நிறுவன வேன்கள் மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 15 Dec 2017 4:30 AM IST (Updated: 15 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூர் அருகே பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான வேன்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார். சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குன்னத்தூர்,

திருப்பூர் அருகே நியூ திருப்பூரில் கே.என்.நிட்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதி பனியன் நிறுவனம் உள்ளது. இந்த பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்று தொழிலாளர்களை ஏற்றுவதற்காக ஈரோடு மாவட்டம் திங்களூருக்கு சென்றது. அங்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நியூ திருப்பூர் நோக்கி அந்த வேன் வந்து கொண்டிருந்தது. இந்த வேனை பிரபு (வயது 28) என்பவர் ஓட்டினார். இந்த வேன் நேற்று காலை திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காளிபாளையம் வந்ததும், அங்கு தொழிலாளர்களை ஏற்றுவதற்காக நின்றது. இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் வேனில் ஏறினார்கள்.

அதே போல் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள வி.ஆர். எக்ஸ்போர்ட் பனியன் நிறுவனத்தை சேர்ந்த வேன் ஒன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பிச்சம்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த வேனை அரவிந்த் (23) என்பவர் ஓட்டினார். இந்த வேன் காளிபாளையம் வந்த போது அங்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டிருந்த கே.என். நிட்ஸ் பனியன் நிறுவனத்தை சேர்ந்த வேன் மீது மோதியது. இதனால் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டிருந்த வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய வேன் அருகில் இருந்த ஆட்டோவை இடித்து தள்ளிக்கொண்டு, வீட்டின் சுவரின் மீது மோதியது.

இந்த விபத்தில் வேன்களில் பயணம் செய்த தொழிலாளர்களான திங்களூரை சேர்ந்த சரஸ்வதி ( 55), சரவணன் (34), குப்புசாமி (62), ஆதிலட்சுமி (40), மற்றொரு ஆதிலட்சுமி, விஜயா ( 35), கவிதா (25), லோகநாயகி, மற்றொரு லோகநாயகி, சித்ரா, வெள்ளிரவெளியை சேர்ந்த ஆறுமுகம் (55), ஈஸ்வரி (40), அகிலா உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி இறந்தார்.

மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் வேன்களை ஓட்டி வந்த டிரைவர்கள் பிரபு மற்றும் அரவிந்த் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் காளிபாளையம் அருகே உள்ள 16 வேலம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், குன்னத்தூர்-பெருந்துறை சாலையில் மறியல் செய்தனர். அப்போது குன்னத்தூர் - பெருந்துறை சாலையில் செல்லும் பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான வேன்கள் அதிக வேகத்தில் செல்வதாகவும், எனவே 16 வேலம்பாளையம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story