குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் சந்தையூர் ஊராட்சி தெற்குவலையபட்டியில் 500 வீடுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு அப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. முறையாக மழை பெய்யாததால் ஒரு ஆழ்துளை கிணறு முற்றிலும் வறண்டு விட்டது.
மற்றொரு ஆழ்துளை கிணற்றில் குறைந்தளவே தண்ணீர் இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் தண்ணீரை தேடி கிராமமக்கள் அலைய வேண்டி உள்ளது. மேலும் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகள் செல்லும் வழியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் பணி சம்பந்தம்மாக வெளியில் சென்றிருப்பதாகவும், அவர் வந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.