பெரும்பாறை மலைப்பாதையில் பஸ்சின் மேற்கூரையில் பயணம் செய்யும் பொதுமக்கள்
பெரும்பாறை மலைப்பதையில் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
பெரும்பாறை,
பெரும்பாறை, பன்றிமலை, ஆடலூர், கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் காபி சாகுபடி செய்து வருகின்றன. இதற்கு ஊடுபயிராக ஆரஞ்சு, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இந்த பகுதிகளில் காபி சீசன் தொடங்கியுள்ளது.
இதில் பழங்களை பறிப்பதற்காக அடிவார பகுதிகளான அய்யம்பாளையம், நெல்லூர், சித்தரேவு ஆகிய பகுதிகளில் மலைப்பாதை மலைப்பாதை வழியாக கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். ஆனால் மலைப்பகுதிகளுக்கு குறைந்தளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மலைப்பகுதிகளுக்கு அடிவாரத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
மேலும் பஸ்சின் படிக்கட்டுகளிலேயே பொதுமக்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். பஸ்கள் நிரம்பி வழிவதால் பொதுமக்கள் பஸ்சின் மேற்கூரையில் ஏறி பயணம் செய்கின்றனர். பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் வேறு வழியின்றி அவர்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலைப்பகுதிக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.