திருப்பூர் டாஸ்மாக் கடை அருகே பார் ஊழியரை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற மர்ம ஆசாமிகள்
திருப்பூர் டாஸ்மாக் கடை அருகே பார் ஊழியரை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற மர்ம ஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
]அனுப்பர்பாளையம்,
திருப்பூர் டாஸ்மாக் கடை அருகே பார் ஊழியரை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற மர்ம ஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் பீர் பாட்டில்குத்துப்பட்ட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் –அவினாசி சாலை அணைபுதூரில் இருந்து ராக்கியாபாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடை வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் தேவகோட்டையை அடுத்த கண்டியன்வயல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதே பாரில் புதுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி (37) மற்றும் அறந்தாங்கியை சேர்ந்த சுந்தர் (33) ஆகியோரும் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைபுதூர் பகுதியை சேர்ந்த 3 பேர் இந்த டாஸ்மாக் கடையில் பீர் வாங்கிக்கொண்டு, அதே வளாகத்தில் இருந்த பார் அருகில் உள்ள நடைபாதையில் இருந்து குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது பார் ஊழியரான ராஜேஷ் அருகில் உள்ள அறையில் இருந்து தண்ணீர் பாக்கெட் மூடையை பாருக்கு தூக்கிச் சென்றார்.
அப்போது ராஜேஷ், மது குடித்துக்கொண்டிருந்த 3 பேரிடமும், ‘‘வழியில் இருக்காதீர்கள், மூடை தூக்கி வர இடைஞ்சலாக உள்ளது, எனவே சற்று ஓரமாக இருந்து மது குடியுங்கள்’’ என்று கூறியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், அவர்கள் குடித்துக்கொண்டிருந்த பீர்பாட்டிலை சுவரில் அடித்து உடைத்து ராஜேசை பயங்கரமாக குத்தினார்கள்.
இதில் வலி தாங்க முடியாத ராஜேஷ் அலறினார். அப்போது பாரில் வேலை செய்து கொண்டிருந்த சுந்தரும், சுப்பிரமணியும் ஓடிச்சென்று, அவர்களிடம் இருந்து ராஜேசை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், சுந்தர் மற்றும் சுப்பிரமணியையும் சரமாரியாக குத்தினார்கள். இதில் பாட்டிலால் குத்துப்பட்ட ராஜேஷ், சுந்தர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இதற்கிடையில் பாட்டிலால் குத்திய 3 பேரும் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து உயிருக்கு போராடிய 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஸ்கூட்டரில் கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் ராஜேஷ் மயக்கம் அடைந்தார். உடனே அந்த ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 3 பேரையும் அதில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜேஷ் மட்டும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நள்ளிரவு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ராஜேசை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சுந்தர் மற்றும் சுப்பிரமணிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் ராஜேசையும் மற்ற 2 பேரையும் பாட்டிலால் குத்தியவர்கள் அணைபுதூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அடிக்கடி இந்த பாருக்கு மது குடிக்க வருவது வழக்கம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கொலையாளிகள் 3 பேரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் நெல்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். டாஸ்மாக் கடை பாரில், பார் ஊழியர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பார் ஊழியர் ராஜேசை, 3 பேர் பாட்டிலால் குத்தியதும், அவர்களிடம் தப்பிக்க ராஜேஷ் அலறியவாரே அங்கும் இங்கும் ஓடினார். இதனால் அவருடைய உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியது. மேலும் பார் முழுவதும் ரத்தம் சிந்தியது. இதையடுத்து இவரை மட்டும் ஒரு ஸ்கூட்டரில் திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஸ்கூட்டரில் தூக்கி சென்றனர். இதனால் அந்த ஸ்கூட்டர் முழுவதும் ரத்தக் கறையாக காணப்பட்டது.