அரசின் திட்டங்கள் மக்களிடம் வெளிப்படையாக சென்றடைய வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு
கடலூரில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், அரசின் திட்டங்கள் மக்களிடம் வெளிப்படையாக சென்றடைய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கடலூர்,
தமிழகத்தில் கோவை, நெல்லை மாவட்டங்களை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று கடலூரில் ஆய்வு பணியை மேற்கொண்டார். கடலூரில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை பார்வையிட்ட அவர், கடலூர் சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, சப்–கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், வேளாண்மை இணை இயக்குனர் நாட்ராயன், மாவட்ட வன அலுவலர் சவுந்தரராஜன், என்.எல்.சி. பொது மேலாளர் முத்து, திட்ட அலுவலர் ஆனந்த்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது கடந்த 2004–ம் ஆண்டு முதல் தற்போது வரை கடலூர் மாவட்டம் சந்தித்துள்ள சுனாமி, புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்த படக்காட்சிகளை காண்பித்து கலெக்டர் விளக்கம் அளித்தார். மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள், சுற்றுலா மையம் போன்ற அடிப்படை புள்ளிவிவரங்களை கவர்னர் கேட்டறிந்தார்.
அதன்பிறகு அதிகாரிகளிடம், நேர்மையாக இருந்தால் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். அரசின் திட்டங்கள் மக்களிடம் வெளிப்படையாக சென்றடைய வேண்டும். கடலூரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தூய்மை இந்தியா திட்ட பணிகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த ஆலோசனை காலை 10.35 மணிக்கு தொடங்கி மதியம் 12.20 மணி வரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கவர்னர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக கடலூர் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி, கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை காணவில்லை. அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று தேவனாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள், கவர்னரிடம் மனு அளித்தனர். இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் அளித்த மனுவில், கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே தொழிற்சாலைகள் விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் சக்திகணபதி அளித்த மனுவில், மழைநீர் கடலுக்கு வீணாக செல்வதை தடுக்க ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர், நுகர்வோர் கூட்டமைப்பினர், அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் அளித்துள்ள மனுவில், கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும், கடலூர்– புதுச்சேரி– சென்னை ரெயில்வே திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும், நுகர்வோர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் அளித்த மனுவில், மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற கவர்னர் மதிய உணவுக்கு பிறகு மதியம் 2.15 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பொதுமக்களுடன் மதியம் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அவரை சந்தித்து மனு கொடுப்பதற்காக 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பொது நல அமைப்பு நிர்வாகிகள், மீனவர்கள், விவசாயிகள் சுற்றுலா மாளிகை முன்பு திரண்டு இருந்தனர்.
ஆனால் அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உள்ளே அனுமதிக்காத அரசு கார் டிரைவர் ஒருவரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அனுமதி பெற்றவர்களை மட்டுமே போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். அவர்கள் கவர்னரை சந்தித்து தனித்தனியாக மனு அளித்தனர். ஆனால் கவர்னரை பார்த்து மனு அளிக்க கூட்டம் அதிகமாக இருந்ததால், அனைவரையும் சந்திக்க கவர்னர் முடிவு செய்தார். அதன்படி அனைவரையும் உள்ளே வரச்சொல்லி சுற்றுலா மாளிகை வாசலில் நின்று பொதுமக்கள் அனைவரிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களை பெற்றார். 35 நிமிடம் அவர் வாசலில் நின்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மனுக்களை பெற்ற அவர் கலெக்டரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.