லஞ்ச வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு கண் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் தற்கொலை


லஞ்ச வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு கண் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Dec 2017 4:15 AM IST (Updated: 16 Dec 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட சென்னை அரசு கண் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் நண்பர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பொன்னேரி,

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையின் இயக்குநராக டாக்டர் ஸ்ரீதர் (வயது 58) என்பவர் பணியாற்றிவந்தார். இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வேலைவாய்ப்புக்காக சான்றுகள் வழங்கும் அலுவலராகவும் இருந்தார்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரி வாலிபர் ஒருவர் சான்றிதழ் கோரி அவரிடம் விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் ரூ.500 லஞ்சம் கொடுத்தால் சான்றிதழ் வழங்கப்படும் என கூறியதாகவும், ரூ.200 உதவியாளர் மூலம் லஞ்சமாக பெற்றதாகவும் கூறி ஒரு வீடியோவை அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ விளக்கம் கேட்டார். இந்த வீடியோ விவகாரம் குறித்து மருத்துவ கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு சென்று, டாக்டர் ஸ்ரீதரை பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கடந்த அக்டோபர் மாதம் டாக்டர் ஸ்ரீதர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. டாக்டர் ஸ்ரீதர் சென்னை அண்ணாநகரில் மனைவி பல் மருத்துவரான டாக்டர் லட்சுமி மற்றும் மகன், மகளுடன் வசித்துவந்தார்.

பணியில் இருந்து ஓய்வுபெற்றதும் பணப்பயன்கள் கிடைக்காததாலும், பழைய சம்பவங்களாலும் மிகவும் மன உளைச்சல் அடைந்திருந்தார். ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்துவந்தார். தன் மகளுக்கும், மகனுக்கும் திருமணம் செய்துவைத்தார். மகளை ஒடிசாவுக்கும், மகனை அமெரிக்காவுக்கும் அனுப்பிவைத்தார்.

டாக்டர் ஸ்ரீதர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் டாக்டர் ஸ்ரீதர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில் வராத 12 லட்சம் ரூபாய் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்துவந்தனர்.

இதனைத்தொடர்ந்து டாக்டர் ஸ்ரீதர் பொன்னேரி அருகே உள்ள மாளிவாக்கம் கிராமத்தில் தனது நண்பர் ஆறுமுகம் என்பவர் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கப்போவதாக மனைவி லட்சுமியிடம் தெரிவித்துவிட்டு கடந்த வாரம் மாளிவாக்கம் வந்தார். பின்னர் ஆறுமுகம் அவரது மனைவியுடன் கொளத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனஉளைச்சலில் வீட்டில் தனியாக இருந்த டாக்டர் ஸ்ரீதர் நண்பரின் வீட்டிலேயே தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆறுமுகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே ஸ்ரீதரின் மனைவி லட்சுமியிடம் கூறினார். அங்கு சென்ற லட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீதரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story