பா.ஜனதாவின் கலாசாரம் மக்களுக்கு நன்றாக தெரியும்
பா.ஜனதாவின் கலாசாரம் என்ன என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பா.ஜனதா என்றால் ‘பொய்.’ ‘பொய்’ என்றால் பா.ஜனதா என்ற நிலை உருவாகியுள்ளது. கொலைகள் எந்த காரணத்திற்காக நடந்தாலும் அதில் பொய்களை கூறிக்கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சி செய்கிறது. அந்த கட்சியின் முன்னணி தலைவர் ஈசுவரப்பா கட்சி கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசும்போது, உங்களிடம் அரசை பற்றி பேச குறை ஒன்றும் இல்லை என்றால், அமைதியாக இருக்க வேண்டாம், பொய்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் பா.ஜனதாவின் உண்மை முகம் வெளியே தெரியவந்துள்ளது.கலவரத்தை ஏற்படுத்துமாறு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக பிரதாப்சிம்ஹா கூறி இருக்கிறார். அதனால் பா.ஜனதாவினர் புதிய, புதிய நாடகங்களை தொடங்குகிறார்கள். இப்போது சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். பா.ஜனதாவின் கலாசாரம் என்ன என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.
காங்கிரசில் எந்த குழப்பமும் இல்லை. கட்சி மேலிடம் உத்தரவின்படி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ள பகுதிகளில் சித்தராமையா பயணத்தை தொடங்கி இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் வசம் உள்ள தொகுதிகளில் கட்சி தலைவர் பரமேஸ்வர் சுற்றுப்பயணம் நடத்த இருக்கிறார். சுற்றுப்பயணத்தில் எந்த குழப்பமும் இல்லை. அமித்ஷா கர்நாடகம் வந்து கூறிவிட்டு சென்றதால், பா.ஜனதாவினர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அமைதியை கெடுக்க முயற்சி செய்கிறார்கள்.இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story