கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் அதிகலாபம் பெற முன்வர வேண்டும்


கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் அதிகலாபம் பெற முன்வர வேண்டும்
x
தினத்தந்தி 16 Dec 2017 5:22 AM IST (Updated: 16 Dec 2017 5:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே அயோத்தியப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று கறவை மாடுகளுக்கான தொழில்நுட்ப மேலாண்மை உத்திகள் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

சேலம்,

மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. கால்நடை வளர்ப்பு தான் கிராமப்புற விவசாயிகளின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கின்றது. விவசாய தொழில் வளர்ச்சியை விட கால்நடை தொழில் வளர்ச்சி சமீப காலமாக சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. விவசாயத்தின் மூலம் கிடைக்கும் உப தீவன பொருட்களை கொண்டு ஒரு சில கறவை மாடுகளை மட்டுமே வளர்த்து வந்தநிலை மாறி தற்போது பெரும்பாலான விவசாயிகள் கறவை மாடு வளர்ப்பை ஒரு முக்கிய தொழிலாக செய்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கிராமத்தில் சுய வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் தனி மனித வருமானமும் அதிகரித்துள்ளது.

கலப்பின முறையில் பசுக்களை வளர்க்கும் போது பால் உற்பத்தி கூடுதலாக கிடைக்கின்றது. ஆனால் அதனுடைய இன விருத்தி திறனில் சில குறைபாடுகள் அவ்வப்போது ஏற்படுகின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கறவை மாடுகளில் இனவிருத்தி திறனை அதிகரித்து வருடம் ஒரு கன்று பெறுவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் தொழில்நுட்ப உத்திகளை முறையாக பின்பற்றி கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் பெற முன்வர வேண்டும். இந்த கருத்தரங்கில் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு சம்பந்தமாக அனைத்து விவரங்களும் அளிக்கப்படும்.

சேலம் மாவட்டம் பால் உற்பத்தி செய்வதில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. மென்மேலும், பால் உற்பத்தியை அதிகரித்து அதிகலாபம் ஈட்டும் வகையில் இங்கு அளிக்கப்படும் புதிய தொழில்நுட்ப உத்திகளை கையாண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இக்கருத்தரங்கில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லோகநாதன், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஜெயந்தி, உதவி பேராசிரியர்கள் ரவி, பாலாஜி, கால்நடை பராமரிப்புத்துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கண்காட்சியை கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார்.

Next Story