கொய்யாவில் குவிந்திருக்கும் நன்மைகள்
பழங்களில் பலரும் கொய்யாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் அதில் சத்துகளுக்குக் குறைவில்லை.
கொய்யாவில் குவிந்திருக்கும் சத்துகள் பற்றி...
கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து, ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட நான்கு மடங்கு அதிகம். இந்த வைட்டமின் ‘சி’ சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன், கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவு கொண்டதாகவும் கொய்யா உள்ளது.
கொய்யாப் பழத்தில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கொய்யாப்பழம் உண்ண அறிவுறுத்தப்படுகிறது.
நன்றாகப் பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்டா பழத்தைச் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.
கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.
மதிய உணவுக்குப் பிறகு கொய்யாப்பழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும், வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சீறு நீரகக் கோளாறு உள்பட பல நோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் கொய்யாவுக்கு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.
Related Tags :
Next Story