‘ஈ’யாலும் அதிக அபாயம்தான்!
நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொசுக்கள் குறித்து மரணபீதி கொள்ளும் நாம், ஈக்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் ஈக்களாலும் அதிகம் அபாயமே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வீட்டில் பெரும்பாலும் காணப்படும் சாதாரண ஈக்களும், நீலநிற ஈக்களும், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவது, புதிய மரபணு ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும், வயிற்றுவலி, ரத்தத்தில் நச்சை ஏற்றுதல், நிமோனியா ஆகிய நோய்களைப் பரப்புகின்றன.
ஈக்களால் தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை ஒரு பறக்கும் பாக்டீரியா விநியோகஸ்தர்களாக இருக்கின்றன.
“ஈக்களால் நோய்க்கிருமிகளைப் பரப்ப முடியும் என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவை எந்த அளவுக்கு அபாயகரமானவை என்பதும், எவ்வளவு தூரம் அவை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்பதும் பலருக்குத் தெரியாது” என பென் ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் டொனால்டு பிரையண்ட் கூறுகிறார்.
வீடு உள்ளிட்ட இடங்களில் காணப்படும் ஈக்களின் உடலின் மேலும், உடலின் உள்ளேயும் இருக்கும் நுண்ணுயிரிகள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், வீட்டில் பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன எனத் தெரியவந்திருக்கிறது. வெப்ப காலங்களில் தோன்றும் நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை எடுத்துச் செல்கின்றன. இந்த இருவகை ஈக்களாலும்தான் அதிகப்படியான பாக்டீரியாக்கள் பரப்பப்படுகின்றன.
நோய்களை திடீரென பரப்பும் காரணிகளாக ஈக்கள் பொது சுகாதார அதிகாரிகளால் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வை வெளியிட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“மிகவும் வேகமான முறையில் நோய்க்கிருமிகளை பரப்புவதில் ஈக்களின் பங்கும் இருக்கலாம் என்பதை எங்கள் ஆய்வு நிரூபிப்பதாகக் கருதுகிறோம்” என்கிறார் பேராசிரியர் பிரையண்ட்.
“நீங்கள் அடுத்தமுறை சுற்றுலா செல்லும்போது, திறந்தவெளியில் உணவு சாப்பிடுவது குறித்து நிச்சயம் யோசிப்பீர்கள்” என்று பிரையண்ட் கூறுகிறார்.
ஈக்களைப் பற்றி இவ்வாறு கூறிப் பயமுறுத்தும் ஆய்வாளர்கள், அவற்றால் சில பயன்களும் இருக்கும் என்கிறார்கள். அவை, நோய்கள் வருவதற்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம், அதேபோல, நுண்ணுயிரிகள் இருக்கும் இடத்தை கண்டறிய அவை பயன்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“இந்த ஈக்கள் உயிருள்ள தானியங்கி விமானங்களாக, மிகவும் குறுகிய இடங்களில்கூட உயிரியல் விஷயங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய அனுப்பப்படலாம்” என, சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக ஆய்வாளர் ஸ்டீபன் ஷஸ்டர் சொல்கிறார்.
குப்பைகளில் உட்காருதல், மக்கிப்போன உணவுகள், மிருகங்கள், அதன் கழிவுகளை உண்ணுதல் உள்ளிட்ட மோசமான விஷயங்கள் ஈக்களின் பொதுத்தன்மைகளாக கருதப்படுகின்றன. அவை, மனிதர்கள், விலங்குகள் மற்றும் செடிகளைத் தாக்கும் பல நோய்களை பரப்புவதாக சந்தேகிக்கப்படுகின்றன. குறிப்பாக, நீல நிற ஈக்கள், இறந்த மிருகங்களுக்கு அருகில் அதிகம் காணப்படுகின்றன.
ஆக, ஈக்களிடம் கூடுதல் எச்சரிக்கை கொள்ள வேண்டும்!
* கெடும் நிலையிலுள்ள உணவுப் பொருளும், கழிவுகளும் ஈக்களை ஈர்த்து இழுக்கிறது. அவற்றை அப்புறப்படுத்தினால் ஈக்களிடமிருந்து தப்பிக்கலாம்.
* ஈக்களால் திரவ உணவுகளைத்தான் சாப்பிட முடியும். ஆனால் திட உணவின் மீது சில வேதிப்பொருட்களை சுரந்து அவற்றை இளகச் செய்து சாப்பிட்டுவிடும். எனவே ஈ உட்கார்ந்த பண்டங்களை சாப்பிடக்கூடாது.
* ஈக்களின் ஆயுள் 2 மாதம். அபரிமிதமாக இனப்பெருக்கம் செய்யும். 24 மணி நேரத்திற்குள் 100 குஞ்சுகளை பொரித்துவிடும்.
* 8 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். காற்று புகும் சிறுதுளைகள் வழியே அறைகளுக்குள் நுழைந்துவிடும்.
* ஈக்களின் கண்கள் கூட்டுக்கள் அமைப்பு கொண்டவை. ஒளி அவற்றை கவர்ந்திழுக்கும். எனவே விளக்குப் பொறி அவற்றை எளிதில் கவர்ந்து அழிக்கிறது.
Related Tags :
Next Story