மகளுக்கு, இறந்தபின்னும் பூங்கொத்து அனுப்பும் தந்தை!
அதீத தந்தைப் பாசத்தை தான் இறந்தபின்பும் வெளிப்படுத்தி வருகிறார், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் செல்லர்ஸ்.
தாய்க்கு நிகரானது, சிலவேளைகளில் அதற்கும் மேலானது தந்தைப் பாசம். ஆனால் பலசமயங்களில் அது வெளித்தெரிவதில்லை. அதிலும் அப்பாக்கள் தங்கள் மகள்கள் மீது கொண்டுள்ள பாசத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
வாஷிங்டனில் வசித்த மைக்கேல் செல்லர்ஸ், புற்றுநோயால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது அதே நகரில் வசிக்கும் இவரது மகள் பெய்லி செல்லர்ஸுக்கு பிறந்த நாளின்போது கடந்த 5 ஆண்டுகளாக தந்தை சார்பில் வாழ்த்துச் செய்தியோடு பூங்கொத்து வந்துகொண்டே இருக்கிறது. அதற்காக அவர் முன் பணம் செலுத்தி இந்த ஏற்பாட்டை செய் திருக்கிறரர்.
இந்த ஆண்டு தனது 21-வது பிறந்த நாளைக் கொண்டாடிய பெய்லிக்கு அதேபோல் வாழ்த்துச் செய்தி வந்தது. அதுதான், இறந்த அப்பாவின் கடைசி பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி என்று அந்தப் பூங்கொத்தில் எழுதி இருந்தது.
அதில், ‘இதுதான் நான் உனக்குச் சொல்லும் கடைசி வாழ்த்து. இனி நீ என்னை நினைத்து அழவே கூடாது. உன்னை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உனக்குத் தேவைப்படும் சமயங்களில் உனக்கு அருகில் நான் இருப்பேன்’ என்று எழுதியுள்ளார்.
தற்போது அதை அந்தப் பெண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பாகப் பரவி வருகிறது. தந்தை- மகளின் அன்பு அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்திருக்கிறது.
பெய்லி தனது கையில் அவள் தந்தை கூறியதை அவரது நினைவாக பச்சை குத்தி வைத்திருக்கிறார்.
நெகிழவைக்கும் தந்தை அன்பு!
Related Tags :
Next Story