சீசன்போல் களை கட்டியது குற்றாலம்: ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் குளிக்க அலைமோதிய அய்யப்ப பக்தர்கள்
குற்றாலம் அருவிகளில் சீசன் காலம் போன்று தண்ணீர் கொட்டுகிறது. இந்த அருவிகளில் குளிப்பதற்கு நேற்று அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
தென்காசி,
குற்றாலம் அருவிகளில் சீசன் காலம் போன்று தண்ணீர் கொட்டுகிறது. இந்த அருவிகளில் குளிப்பதற்கு நேற்று அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். சீசன் காலத்தில் விழும் தண்ணீரானது, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பல்வேறு மூலிகை செடிகளை வருடிக் கொண்டு வருவதால், இதில் குளிக்க சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவார்கள்.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்வார்கள். இந்த அருவிகளில் சிறுவர்கள் எவ்வளவு நேரம் குளித்தாலும் அவர்களுக்கு ஜலதோஷம் பிடிப்பதில்லை. சிறப்பு வாய்ந்த சீசன் காலம் முடிந்த பின்னர், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக குற்றால அருவிகளில் அவ்வப்போது தண்ணீர் கொட்டி வருகிறது.
அருவிகளில் வெள்ளப்பெருக்குமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் அவ்வப்போது திடீரென வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. தற்போதைய காலங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குற்றாலத்தில் குறைவாகவே இருக்கும் என்பதால் பெரும்பாலும் குற்றாலம், தென்காசி சுற்று வட்டாரத்தை சேர்ந்த உள்ளூர்வாசிகளே அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஒகி புயலால் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. ஆனாலும் மெயின் அருவியில் மட்டும் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது.
அலைமோதிய அய்யப்ப பக்தர்கள்இந்தநிலையில் கார்த்திகை மாதம் பிறந்தது முதல் வெளியூரில் இருந்து செங்கோட்டை வழியாக சபரி மலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள், குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடிச் செல்கிறார்கள். தற்போது மார்கழி மாத பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மற்ற அருவிகளில் சுமாராக தண்ணீர் கொட்டுகிறது. நேற்று காலையில் மெயின் அருவியில் குளிப்பதற்கு அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் குற்றாலம் சீசன் காலம் போன்று களை கட்டி உள்ளது.